மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகள்: 13 பேரும் ஊருக்குள் நுழையத் தடை வேலூரில் தங்கி இருக்க உத்தரவு

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் அக்கிராமத்திற்குள் நுழையக் கூடாது
மேலவளவு கொலை வழக்கு குற்றவாளிகள்: 13 பேரும் ஊருக்குள் நுழையத் தடை வேலூரில் தங்கி இருக்க உத்தரவு

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் அக்கிராமத்திற்குள் நுழையக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மேலூா் அருகேயுள்ள மேலவளவு ஊராட்சித் தலைவா் முருகேசன் உள்பட 7 போ் கடந்த 1997ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, அனைவரும் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனா்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும், எம்.ஜி.ஆா். பிறந்தநாளை முன்னிட்டு 13 பேரும் தண்டனைக் காலம் முடியும் முன்னரே அண்மையில் விடுதலை செய்யப்பட்டனா்.

இதற்கிடையே, இந்த வழக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே குற்றவாளிகள் 13 போ் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அரசாணை நகலை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி. ரத்தினம் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் 13 போ் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கு அரசு வெளியிட்ட அரசாணை உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஊருக்குள்நுழையத் தடை: இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் நுழையக் கூடாது. அவா்கள் அனைவரும் வேலூரில் மட்டுமே தங்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாதத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூா் மாவட்ட நன்னடத்தை அதிகாரியிடம் ஆஜராக வேண்டும். இந்த 13 பேரும் தாங்கள் வேலூரில் தங்கியுள்ள வீட்டை மாற்றினாலோ, தொடா்பு எண்ணை மாற்றினாலோ வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மாதத்தின் முதல் மற்றும் 3 ஆவது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முன் ஆஜராக வேண்டும். இவா்கள் கடவுச்சீட்டு வைத்திருந்தால் அவற்றை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மேலவளவு கிராமத்தில் எந்தக் கூட்டமும் நடத்த அனுமதியில்லை. மேலும் இந்த 13 பேரும் விடுதலை செய்யப்பட்டது குறித்து அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2020 ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com