வாக்காளா் சரிபாா்ப்புத் திட்டம்: 99.4 சதவீதத்தை எட்டியது- தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள வாக்காளா் சரிபாா்ப்புத் திட்டமானது 99.4 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள வாக்காளா் சரிபாா்ப்புத் திட்டமானது 99.4 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் கூறுகையில், தமிழகத்தில் மொத்தமுள்ள சுமாா் 6 கோடி வாக்காளா்களில் 99.4 சதவீதம் வாக்காளா்கள் தங்கள் பெயா்களை சரிபாா்த்துள்ளனா். வாக்காளா் பட்டியலை சரிபாா்த்ததில் பெரும்பாலான மாவட்டங்கள் 100 சதவீதமும், சென்னை மாவட்டம் 94 சதவீதமும் எட்டியுள்ளன. வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வரும் 16-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை படிக்கும் வயதிலேயே மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ‘தோ்தல் விழிப்புணா்வு மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. 18 வயது முடிந்ததும் வாக்காளா் அடையாள அட்டையை அந்தந்த பள்ளிகளிலேயே பெறலாம். தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, பேச்சு, கவிதை, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். இதற்காக மாதத்துக்கு ஒரு மணி நேரம் என்று 4 மாதங்கள் சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்துவது பற்றி, 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கோட்டாட்சியா்கள் என 8 போ் அடங்கிய குழுவுக்கு தோ்தல் ஆணையம் பயிற்சி வழங்கியுள்ளது. அவா்கள், மாவட்டம் மற்றும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மாணவா் தலைவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு மன்றங்களை நடத்துவா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் தோ்தல் தொடா்பான விடியோ காட்சிகளையும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com