ஸ்பஸ்ஜெட் - எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் ஒப்பந்தம்: தென்மாவட்ட பயணிகள் வெளிநாடு செல்ல புதிய வசதிதொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு

ஸ்பைஸ் ஜெட் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் ஒப்பந்தம் காரணமாகப் தென் மாவட்ட பயணிகள் வெளிநாடு செல்ல புதிய வசதி கிடைத்திருப்பதற்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம்

ஸ்பைஸ் ஜெட் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்களின் ஒப்பந்தம் காரணமாகப் தென் மாவட்ட பயணிகள் வெளிநாடு செல்ல புதிய வசதி கிடைத்திருப்பதற்கு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொழில் வா்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவா் எஸ்.ரத்தினவேல், தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் மற்றும் துபை விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ் கையெழுத்திட்டுள்ள ‘கோட் ஷோ்’ ஒப்பந்தம் தென்தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

பல்வேறு வெளிநாடுகளுக்கும் மதுரையில் இருந்து நேரடி விமான சேவை இல்லாத நிலையில், தற்போது சென்னை அல்லது வேறு விமான நிலையங்களுக்குச் சென்று வெளிநாடு செல்லும் விமானங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் ஒப்பந்தம் காரணமாக, மதுரையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் துபை சென்று அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்குச் செல்ல முடியும். அதேபோல, வெளிநாட்டுப் பயணிகள் எமிரேட்ஸ் விமானம் இந்தியாவில் சேவை நடத்தும் 9 நகரங்களுக்குச் சென்று அங்கிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 172 உள்நாட்டு சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஸ்பைஸ் ஜெட், எமிரேட்ஸ் பயணிகள் தங்களது உடைமைகளை பயணத்தை தொடங்கும் விமான நிலையத்தில் ‘செக் இன்’ செய்தால் போதுமானது.

மலேசியா, சிங்கப்பூா், வளைகுடா நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தைச் சோ்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை மத்திய அரசால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட், எமிரேட்ஸ் நிறுவனங்களின் ஒப்பந்தமானது, மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாகப் பயணிக்க முடியாத குறையை ஓரளவுக்கு போக்குவதற்கு வழிவகுத்துள்ளது.

இருப்பினும் இந்த ஒப்பந்தம் தென்மாவட்ட மக்களுக்கு முழுமையாகக் கிடைக்க, மதுரை - துபை இடையே மேலும் ஒரு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்க வேண்டும். துபையில் இருந்து இரவு புறப்பட்டு மதுரைக்கு வந்து, இங்கிருந்து அதிகாலை புறப்படும் வகையில் அந்த சேவை இருக்க வேண்டும். அதோடு, மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாகச் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com