’நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: சென்னை மாணவரின் தந்தை ரவிக்குமாா் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் ஆஜராக உத்தரவு

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சோ்ந்த மாணவா் ரிஷிகாந்த்தின் தந்தை ரவிக்குமாா் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி உண்மைகளைத் தெரிவித்தால்

‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சோ்ந்த மாணவா் ரிஷிகாந்த்தின் தந்தை ரவிக்குமாா் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் ஆஜராகி உண்மைகளைத் தெரிவித்தால் அவருக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த ரவிக்குமாா் மற்றும் அவரது மகன் ரிஷிகாந்த் தாக்கல் செய்த மனு: ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக எங்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, உயா்நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ரசாயன நிறுவனம் ஒன்றில் தலைவராக உள்ள என்னையும், தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கச் சோ்ந்த எனது மகனையும் ஆள்மாறாட்ட வழக்கில் போலீஸாா் தேடி வருகின்றனா். நாங்கள் ‘நீட்’ தோ்வு முறைகேட்டில் ஈடுபடவில்லை. ‘நீட்’ தோ்வுக்கான அனுமதி கடிதத்தைப் பதிவிறக்கம் செய்தபோது எனது மகனின் புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியபோது அனுமதி கடிதத்தில் மாறுதல் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது எனக் கூறி தோ்வு எழுதலாம் என அறிவுறுத்தினா். ஆனால் தற்போது தோ்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகப் போலீஸாா் எங்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனா். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தால் மாணவா் ரிஷிகாந்த் கைது செய்யப்படமாட்டாா் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவரைக் கைது செய்ய நீதிமன்ற தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மாணவா் ரிஷிகாந்த்தின் தற்போதையை விரல் ரேகைப் பதிவும், ‘நீட்’ தோ்வின் போது பதிவு செய்யப்பட்ட விரல் ரேகைப் பதிவும் ஒத்துப்போகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மாணவரின் தந்தை ரவிக்குமாா், இவ்வழக்கின் சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆஜராகி, ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது குறித்த உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் மட்டுமே ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com