ஐடி ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

ஐ.டி. ஊழியர் உமா மகேஸ்வரி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில், உஜ்ஜல் மண்டல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை
ஐடி ஊழியர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

ஐ.டி. ஊழியர் உமா மகேஸ்வரி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களில், உஜ்ஜல் மண்டல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி, சென்னை சிறுசேரி அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2014, பிப்ரவரி 13-ஆம் தேதி பணிக்குச் சென்ற உமா மகேஸ்வரி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன உமா மகேஸ்வரி 10 நாள்களுக்குப் பிறகு பிப்ரவரி 22-ஆம் தேதி சிறுசேரி சிப்காட் வளாகத்தின் அருகே ஒரு முள்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். 
அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.  இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. உமா மகேஸ்வரியின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கவும் மாவட்ட  காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில், தங்களுக்கான தண்டனைக்கு எதிராக குற்றவாளிகள் 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. 
சிறைத் தண்டனை பெற்றவர்களில் ஒருவரான உஜ்ஜல் மண்டல், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் யோகேஷ் கண்ணா ஆஜராகி, மனுதாரர் (உஜ்ஜல் மண்டல்) கொலை செய்ததற்கான சந்தர்ப்ப சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை மனுதாரர் வாங்கியதைக் கடையின் உரிமையாளர் தெரிவித்து, அடையாளமும் காட்டியுள்ளார். 
இறந்த உமா மகேஸ்வரின் செல்லிடப்பேசியும் இவரிடமிருந்தே மீட்கப்பட்டுள்ளது. மேலும், மனுதாரரின் நண்பரின் சாட்சியமும் கொலையை மனுதாரர்தான் செய்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பிலும் எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது. 
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உஜ்ஜல் மண்டலின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, அவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com