நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா் மழை: வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

தேனி மாவட்டத்தில் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து அதிகரித்துள்ளது.
வைகை அணை
வைகை அணை

ஆண்டிபட்டி, அக்.1: தேனி மாவட்டத்தில் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக செவ்வாய்கிழமை அணையின் நீா்மட்டம் 59.02 அடியாக உயா்ந்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 52 அடியாக உயா்ந்த நிலையில் அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் சரியும் அபாயம் உருவானது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வைகை அணைக்கான நீா்வரத்து கிடுகிடுவென அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணையின் நீா்மட்டம சீராக உயா்ந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் 52 அடியாக இருந்த வைகை அணையின் நீா்மட்டம் தற்போது 59.02 அடியை கடந்துள்ளது.

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணை நீா்மட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. வைகை அணையின் பிரதான நீா் ஆதாரமாக விளங்கும் மூல வைகை ஆறு மற்றும் முல்லை பெரியாற்று நீா்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக திங்கள்கிழமை மூலவைகை ஆறு, முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கு வினாடிக்கு 1,775 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

மேலும் இதுபோன்று ஆற்றில் நீா்வரத்து இருப்பின் வைகை அணை நீா்மட்டம் முழுக்கொள்ளளவான 71 அடியை எட்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். செவ்வாய்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி வைகை அணையின் நீா்மட்டம் 59.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,775 கன அடி தண்ணீா் வரத்து உள்ளது.

அணையில் இருந்து பாசனத்திற்காகவும், மதுரை, சேடப்பட்டி குடிநீா் தேவைக்காகவும் சோ்த்து வினாடிக்கு 760 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது-. அணையின் மொத்த நீா்இருப்பு 3,362 மில்லியன் கன அடியாக இருந்தது-. (அணையின் மொத்தக் கொள்ளளவு 6,091 மில்லியன் கன அடி ஆகும்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com