மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டாற்று வெள்ளம்: சதுரகிரி மலையில் 30 பேர் தவிப்பு

விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, சதுரகிரி மலையில் தங்கியிருந்த 30 பக்தர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
 தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் மதுரை மாவட்ட எல்லையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் உள்ள சுவாமிகளை தரிசிப்பதற்கு அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசை தினம் என்பதால், 11 ஆயிரம் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு சென்றனர். அதில், 100 பக்தர்கள் கோயில் வளாகத்தில் அன்றிரவு தங்கினர். 
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பிளாவடி கருப்பு, கோரக்கநாதர் கோயில் வழக்குப் பாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் கீழே இறங்க வனத்துறையினர் தடை விதித்தனர். 
அதன் பின்னர் மழை குறைந்து, ஓடைகளில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் 70 பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்துக்கு கீழே இறங்கி வந்தனர். இந்நிலையில், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 30 பக்தர்கள் சதுரகிரி கோயில் பகுதியில் கீழே இறங்க முடியாமல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு, மீன்வெட்டிப் பாறை அருவி, ராக்கச்சி அம்மன் கோயில் மற்றும் சிற்றோடைகளில் பலத்த மழை பெய்ததால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியில் இருந்த வன விலங்குகள் மேடான பகுதியை நோக்கி இடம் பெயர்ந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com