இந்தியப் பிரதமர், சீன அதிபர் வருகை: தமிழக முதல்வர், அமைச்சர்கள் மாமல்லபுரத்தில் ஆய்வு

மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வருகை தருவதை முன்னிட்டு நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர்
மாமல்லபுரம்  கடற்கரை கோயில்  பகுதியில் ஆய்வு மேற்கொண்ட  தமிழக  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
மாமல்லபுரம்  கடற்கரை கோயில்  பகுதியில் ஆய்வு மேற்கொண்ட  தமிழக  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வருகை தருவதை முன்னிட்டு நடைபெற்று வரும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  துணைமுதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அமைச்சர்கள் மாமல்லபுரத்திலுள்ள  முக்கிய நினைவுச்சின்னங்களை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 
இருநாட்டுத் தலைவர்களும் வரும் அக்.11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொள்வதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
இதையொட்டி மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் திங்கள்கிழமை மாமல்லபுரத்திலுள்ள முக்கிய நினைவுச் சின்னங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். 
முன்னதாக, தமிழக காவல்துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதியும் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.  
கடற்கரைக் கோயிலில் ஆய்வு: இருநாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்திற்கு வருகை தர இன்னும் சிலநாள்களே உள்ள நிலையில்  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அரசு தலைமைச் செயலர் சண்முகம், காவல்துறைத் தலைவர் ஜே.கே.திரிபாதி உள்ளிட்டோர் புதன்கிழமை மாமல்லபுரத்திற்கு வருகை தந்தனர். அவர்களுடன்  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், தங்கமணி மற்றும் மத்திய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் உடன் வந்தனர்.  
அவர்கள் அர்ஜுனன் தபசு,   ஐந்து ரதங்கள். வெண்ணெய்  உருண்டைப்பாறை, கடற்கரைக் கோயில் பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  
இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்ள இருக்கும்  மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கலை நிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ள  இடங்களையும் பார்வையிட்டு, அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்தாலோசனை செய்தார். 
முன்னதாக அவர், மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக  ஹோட்டலில் பாதுகாப்புப் பணிகள் குறித்து அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், பாதுகாப்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். இருநாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ள நிலையில், அங்கு பயங்கரவாதிகளால் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சர்வதேச உளவு அமைப்பு எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 
மேடையில் நெகிழியைத் தவிர்க்கும் வகையில் ஹோட்டல், மாவுக்கடை, பூக்கடை வியாபாரிகளுக்கு துணிப்பையை வழங்கி நெகிழி ஒழிப்பு  விழிப்புணர்வை ஏற்படுத்த வியாபாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா,  மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட எஸ்.பி. கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், முன்னாள் எம்எல்ஏக்கள் தனபால், வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

செல்லிடப்பேசி கோபுரங்களை அகற்றும் பணி தொடங்கியது
பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு வெண்ணெய் உருண்டைப்பாறை அருகில் இருந்த 2 செல்லிடப்பேசி கோபுரங்களை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. 
பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வரும் 11-ஆம் தேதி வருகை தரவுள்ளனர். இந்நிலையில், மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட வெளியுறவுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குழுவினர் வெண்ணெய் உருண்டைப்பாறை அருகில் இருந்த 2 செல்லிடப்பேசி கோபுரங்களை அகற்றுமாறு உத்தரவிட்டனர். 
செல்லிடப்பேசி கோபுரங்களை அகற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து காவல்துறை, வருவாய்த்துறை, பேருராட்சி நிர்வாகத்தினர் செல்லிடப்பேசி நிறுவனத்திற்கு கடிதம் அளித்து, விரைவில் அகற்றுமாறு கோரினர்.  இதையடுத்து வியாழக்கிழமை காலை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 2 செல்லிடப்பேசி கோபுரங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com