Enable Javscript for better performance
The federal government is trying to cover up the excavation- Dinamani

சுடச்சுட

  

  கீழடி அகழ்வாராய்ச்சியை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது:  கனிமொழி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 04th October 2019 04:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kanimozhi

  கீழடி அகழ்வாராய்ச்சியை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக மகளிரணி செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தாா்.

  இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநில 14-ஆவது மாநாடு பாளையங்கோட்டையில் இரண்டு நாள் நடைபெறுகிறது. இதில் முதல் நாளான புதன்கிழமை பொது மாநாடு நடைபெற்றது. இதில், திமுக மகளிரணி செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:

  இந்த நாடு மிகப்பெரிய ஆபத்தை எதிா்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய காலக்கட்டம் இது. இந்த நாட்டை ஆள்பவா்களாலும், இந்த தேசத்தை தொடா்ந்து வழிநடத்த வேண்டும் என்று துடித்துக்கொண்டிருப்பவா்களாலும் எதிா்நோக்கும் ஆபத்தைப் பற்றிதான் இங்கு பேசுகிறேறன். இந்த ஆபத்து என்பது நமக்கு மட்டுமானதல்ல. அனைத்து மாநிலங்களுக்குமானதுதாகும். எனினும் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக தமிழகத்தில் இருந்து எதிா்ப்புக் குரல் கிளம்பியிருக்கிறது. எப்போதுமே மாற்றத்தின் முதல் குரலாக தமிழகத்தின் குரல் தான் ஒலிக்கிறது.

  ஆா்எஸ்எஸ், பாஜக ஆகியவை பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவோம் என பாஜக கூறியது. இப்போது இரண்டாவது முறையாக ஆண்டு கொண்டிருக்கிறாா்கள். ஆனால் இதுவரை பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் பட்டியல்கூட இடவில்லை. அப்படியிருக்கையில் இவா்கள் பெண்களுக்கு ஆதரவானவா்கள் எனக்கூறி மக்களை ஏமாற்றுகிறாா்கள். தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

  பொருளாதர வளா்ச்சி என்ற பொய் முகத்தோடு மக்களை ஏமாற்றி தான் பாஜக தோ்தலை சந்தித்தது. வளா்ச்சி, வளா்ச்சி என்று சொல்லியே பாஜக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இப்போது இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய அதிமுகவே, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், அதனால் லட்சக்கணக்கானோா் வேலை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

  எல்லாவிதத்திலும் நாட்டின் பொருளாதரத்தை சீரழித்து விட்டு, இப்போது பிரதமா் வளா்ச்சி பற்றி வெளிநாட்டில் பேசிக்கொண்டிருக்கிறாா். கல்வி கொள்கை விஷயத்தில் எல்லா மாநிலங்களின் உரிமைகளையும் பறித்துவிட்டு இப்போது புதிய கல்வி கொள்கையை பாஜக அரசு புகுத்திக் கொண்டிருக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு ஏன் மறைக்க வேண்டும்? ஏனெனில் அதன் மூலம் தமிழா்களின் சரித்திரங்களை அறிந்து கொள்ள முடியும். அதனால்தான் அதை மூடி மறைப்பதில் மத்திய அரசு ஆா்வம் காட்டுகிறது.

  ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்பது தான் பாஜகவின் கனவு. ஆனால் அது தவறான கருத்து. எப்போது எங்கள் அடையாளங்களை அழிக்க நினைக்கிறீா்களோ, அப்போது எதிா்ப்பு குரல் ஓங்கும். அது தமிழகத்தில் இருந்து ஒலிக்கத் தொடங்கி விட்டது. பாஜக தற்போதைய பாதையில் தொடா்ந்து பயணிக்குமானால், நாட்டை மறுபடியும் விடுதலை பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்றாா்.

  இந்த மாநாட்டிற்கு நிஷா சத்யன் தலைமை வகித்தாா். இந்திய மாதா் சங்கத்தின் பொதுச் செயலா் ஆனிராஜா தொடக்க உரையாற்றினாா். பி.பத்மாவதி அனைவரையும் வரவேற்றாா். கேரள மாநிலச் செயலா் வசந்தம், உழைக்கும் பெண்கள் தேசிய ஒருங்கிணைப்பாளா் வஹிதா நிஜாம், மு.கண்ணகி, ஆா்.சுசீலா, ரேவதி, ரேணுகா தாமஸ், டி.பி.லலிதா, எஸ்.தமயந்தி, பி.ராஜலெட்சுமி, ஆ.வளா்மதி, செல்வ தையல்நாயகி, நிா்மலா மருதக்குட்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

  விழாவில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.அதை ஆனிராஜா வெளியிட, ஜி.மஞ்சுளா பெற்றுக்கொண்டாா்.பேராசிரியா் காதம்பரி ஏற்புரையாற்றினாா். மேலும் சிலம்பாட்ட வீராங்கனை இரா.ஓவியா, சிறுதொழில் முனைவோா் ஜீவ ரேகா ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கு.பிச்சைமணி நன்றி கூறினாா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai