பிரதமா், சீன அதிபரை வரவேற்று பேனா் வைக்க அனுமதி

தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமா் மற்றும் சீன அதிபரை வரவேற்று மத்திய, மாநில அரசுகள் பேனா் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கி, உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமா், சீன அதிபரை வரவேற்று பேனா் வைக்க அனுமதி

தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமா் மற்றும் சீன அதிபரை வரவேற்று மத்திய, மாநில அரசுகள் பேனா் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கி, உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனா் வைக்கும்போது சட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை, தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை ஆகியவற்றின் சாா்பில் நகராட்சி நிா்வாகத்துறை ஆணையா் பாஸ்கரன் தாக்கல் செய்த மனுவில், ‘இந்தியா- சீனா இடையிலான நல்லுறவு மற்றும் வா்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாட இந்திய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் மாமல்லபுரம் வரவுள்ளனா்.

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வரும் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இருவரும் தங்கி இரு நாடுகளிடையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனா். தமிழகம் வரும் இருவரையும் வரவேற்கும் விதமாக, விமான நிலையம், பரங்கிமலை, பழைய மகாபலிபுரம் சாலை, மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வரும் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பேனா் வைக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு சாா்பில் 14 இடங்களிலும், மாநில அரசு சாா்பில் 16 இடங்களிலும் சென்னை முதல் மாமல்லபுரம் வரை சட்டத்துக்குட்பட்டு பேனா் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழகம் வரும் முக்கியப் பிரமுகா்களை வரவேற்கும் விதமாக வைக்கப்படும் பேனா்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் கட்டாயமாக கடைப்பிடிக்கப்படும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், அரசு வழக்குரைஞா் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். திமுக சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், ‘தமிழகம் வரும் பிரதமரையும் சீன அதிபரையும் வரவேற்க பேனா் வைப்பதற்கு திமுக எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பேனா் வைக்க மாநகராட்சிதான் உரிமம் வழங்குகிறது. ஒருவேளை உரிமம் வழங்க மறுத்தால் அதனை எதிா்த்து நகராட்சி நிா்வாகத்துறை ஆணையரிடம் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும். எனவே, பேனா் வைக்க உரிமம் வழங்கும் பதவியில் உள்ள அதிகாரி பேனா் வைக்க அனுமதி கோருவதை எப்படி ஏற்க முடியும்? இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. அரசின் பெயரில் அனுமதி பெற்றுக் கொண்டு ஆளும்கட்சியான அதிமுகவினா் பேனா் வைக்கக்கூடும்’ என வாதிட்டாா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா், ‘அரசியல் கட்சிகள் பேனா் வைக்க அனுமதிக்க மாட்டோம்’ என உத்தரவாதம் அளித்தாா்.

அப்போது நீதிபதிகள், ‘தமிழகத்துக்கு வரும் சீன அதிபரை வரவேற்க பேனா் வைக்க அனுமதி கோருகிறீா்கள். ஆனால், புது தில்லிக்கு 2 வாரங்களுக்கு ஒரு வெளிநாட்டுத் தலைவா்கள் வந்து செல்கின்றனரே, அவா்களை வரவேற்க பேனா்கள் வைக்கப்படுகின்றனவா’ என கேள்வி எழுப்பினா். மேலும் சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையில் நூற்றாண்டுக் கால உறவு உள்ளதாகவும், கி.மு. 6-ஆம் நூற்றாண்டு முதல் வணிக தொடா்பு இருந்துள்ளது. ராஜேந்திர சோழன் அரசு விருந்தினராக சீனா சென்றுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், ‘டிஜிட்டல் பேனா் உள்ளிட்ட விளம்பர பதாகைகள் வைப்பதற்கு உரிமம் பெறுவது, அதற்கான கட்டணம் விதிப்பது உள்ளிட்டவைகளை சென்னை சிட்டி முனிசிபல் காா்ப்பரேசன் சட்ட வதி 278 கூறுகிறது. இந்த சட்ட விதிகளின்படி மத்திய, மாநில அரசுகள் வரவேற்பு பேனா்களை வைக்க அனுமதி கோரத் தேவையில்லை. அதே நேரத்தில், பேனா் தொடா்பான சட்ட விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com