திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியானது!

திருச்சியில் பிரபல கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு போன வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை திருவாரூரில் தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
திருச்சி: லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியானது!

திருச்சியில் பிரபல கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு போன வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை திருவாரூரில் தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் இரண்டு முகமூடிக் கொள்ளையர்கள் நுழைந்து, நகைகளை திருடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த விடியோ தற்போது வெளியாகியுள்ளது. விடியோவில், கொள்ளையர்கள் நிதானமாக ஒவ்வொரு தங்க நகையையும் திருடுவது தெரிய வந்துள்ளது.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல  நகைக் கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் புதன்கிழமை திருட்டுபோனது. 

இது தொடர்பாக நகைக்கடை மேலாளர் ஜா. நாகப்பன் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி, கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து 7 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.  

மேலும், நகைக்கடை ஊழியர்கள் 190 பேர் மற்றும் காவலாளிகள் 12 பேரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் விசாரணை நடந்தது. 

இவை தவிர நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும், நகைக்கடையைச் சுற்றியும், நகரில் உள்ள முக்கியச் சாலைகளிலும் உள்ள சுமார் 700 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், தொலைக்காட்சிகள் மற்றும் கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.  

திருவாரூரில் முக்கிய குற்றவாளிக்​ கைது: இந்நிலையில் திருவாரூரில் உள்ள கமலாம்பாள் நகரில் நகர போலீஸார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரு சக்கரவாகனத்தை நிறுத்தினர். போலீஸாரை கண்டதும் அதில் வந்த ஒருவர் தான் வைத்திருந்த பையுடன் தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(32) என்பதும், அவர் திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையில் நகைகளை திருடிவிட்டு தனக்கான பங்கை வாங்கி கொண்டு வந்ததும் தெரிய வந்தது.  இதைத் தொடர்ந்து அவரது பையில் வைத்திருந்த 4.5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து, அதனை ஆய்வு செய்தபோது தங்க நகைகளில் இருந்த பார் குறியீடும்,  திருட்டுபோன திருச்சி நகைக்கடையின் நகையும் ஒன்றாக இருப்பதை போலீஸார் உறுதி செய்தனர்.

தப்பியோடிய சுரேஷ் பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூரைச் சேர்ந்த முருகனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com