ராதாபுரம் தொகுதி: இன்று மறுவாக்கு எண்ணிக்கை

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்றுகளின் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்.4) நடைபெறவுள்ளது.
ராதாபுரம் தொகுதி: இன்று மறுவாக்கு எண்ணிக்கை


ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்றுகளின் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (அக்.4) நடைபெறவுள்ளது. இதனிடையே, மறு வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  
தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ராதாபுரம் தொகுதியில்  திமுக சார்பில் போட்டியிட்ட நான் 69 ஆயிரத்து 541 வாக்குகள் பெற்றேன். என்னை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐ.எஸ். இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகள் பெற்றார். என்னை விட 49 வாக்குகள் அதிகம் பெற்றதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்தலில் அதிகாரிகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக, தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. ராதாபுரம் தொகுதி தேர்தல் அதிகாரிகள் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக செயல்பட்டனர். தபால் வாக்குகளை எண்ணும்போது போலீஸார் எங்களை வெளியேற்றி விட்டனர். மேலும் வாக்கு எண்ணிக்கையின் 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளை எண்ணும்போது எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை. எனவே அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஒருவரை நியமித்து, அவர் தலைமையில் இந்த வாக்குகள் அனைத்தையும் எண்ண வேண்டும். இதற்காக தேர்தல் பணியில் முன் அனுபவம் உள்ள அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி, எம்எல்ஏ இன்பதுரை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது எம்எல்ஏ இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் டி.வி.ராமானுஜம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது. எனவே மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு 3 வாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உச்சநீதிமன்றம் பிறப்பிக்கின்ற உத்தரவை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்போது வாக்குகளை எண்ணுவதால் தங்கள் கட்சிகாரருக்கு என்ன பாதிப்பு வர போகிறது என கேள்வி எழுப்பினார். 

அப்போது மூத்த வழக்குரைஞர் டி.வி.ராமானுஜம், 203 தபால் வாக்குகளுக்கு சான்றொப்பம் வழங்கும் அதிகாரியான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் அளித்துள்ளார். அவர் சான்றொப்பம் அளிக்கும் அதிகாரி இல்லை எனக் கூறி, தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். ஆனால், அந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பம் அளிக்கும் அதிகாரி தான் என முடிவு செய்து 203 தபால் வாக்குகளை எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தால், வாக்குகளை மறுபடியும் எண்ணக்கூடாது என கோரிக்கை விடுக்க இன்பதுரைக்கு முழு உரிமை உள்ளது எனக் கூறி வாதிட்டார்.
அப்போது அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் டி.ஆர்.ராஜகோபால், தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது.

இந்தத் தேர்தல் வழக்கின் இறுதி தீர்ப்பை எதிர்த்து தான் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து இன்பதுரை தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 
மேலும், ஏற்கெனவே கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, வெள்ளிக்கிழமை (அக்.4) காலை 11.30 மணிக்கும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். 
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளையும், 19, 20 மற்றும் 21 ஆகிய 3 சுற்று வாக்குகளையும் உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட திருநெல்வேலி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலவர் பால்பாண்டி உள்பட 24 பேரை நியமித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
இந்த உத்தரவு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
 ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகளின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அத்தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை வியாழக்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை உடனடியாக விசாரிக்குமாறு நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு வழக்கமான விசாரணை பட்டியலில் வரும் போது விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக அப்பாவு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com