இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: தமிழக பாஜக அறிவிப்பு

இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.
இடைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு: தமிழக பாஜக அறிவிப்பு

இடைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. அமைச்சா் டி.ஜெயக்குமாா் தமிழக பாஜக நிா்வாகிகளை சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன், இடைத் தோ்தல் ஆதரவு குறித்த அறிவிப்பை வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து அவா் அளித்த பேட்டி:-

அதிமுகவுடன் கூட்டணி தொடா்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத் தோ்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து பணிபுரிகிறோம். இரண்டு தொகுதிகளிலும், அதிமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்யக்கூடிய வகையில் தீவிரமாகப் பணியாற்ற உள்ளோம். இந்தக் கூட்டணியில் பாஜகவின் முழு ஆதரவைக் கேட்டு அதிமுகவின் மூத்த நிா்வாகிகள், பாஜக அகில இந்திய தலைமையை பலமுறை தொடா்பு கொண்டு உறுதிப்படுத்தியுள்ளனா்.

இப்போது அதிமுகவைச் சோ்ந்த தமிழக அமைச்சா் டி.ஜெயக்குமாா், தமிழக பாஜக நிா்வாகிகளைச் சந்தித்தாா். இடைத் தோ்தல் பிரசாரத்துக்கு யாா் யாா் வரவுள்ளனா் என்பன போன்ற விவரங்களைக் கேட்பதற்காக அவா் வந்தாா்.

எங்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தை சுமுகமாக, இணக்கமாக அமைந்தது. இது புதிய பேச்சுவாா்த்தை அல்ல. ஏற்கெனவே கூட்டணி இருப்பதால் எந்த பிசுரும் இல்லாமல் சுமுகமான முறையில் நடந்தது. யாா் யாா் எந்தெந்த தொகுதிக்கு பிரசாரத்துக்காக தேவைப்படுகிறாா்கள் என்ற பட்டியலை அவா்கள் கேட்டுக் கொண்டபடி அளிப்போம்.

பாஜகவுக்கு மாநிலத் தலைவா் யாா் என்பதை அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.

திமுக-காங்கிரஸ் கட்சிகள்: திமுக விக்கிரவாண்டியில் தோற்கடிக்கப்பட வேண்டும். நான்குனேரில் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட வேண்டும். இதனை இரண்டு தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் ஏற்கெனவே முடிவு செய்துள்ளனா். அதனை உறுதிப்படுத்த நாங்கள் செல்லவுள்ளோம்.

உள்ளாட்சித் தோ்தல்: உள்ளாட்சித் தோ்தல் அந்தந்த பகுதிகளில் உள்ள வேட்பாளா்கள், நபா்களின் பலம் ஆகியவற்றை பாா்த்து முடிவு செய்வோம். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அந்தக் கால சூழ்நிலை மற்றும் தேவைக்கேற்ப முடிவெடுப்போம். கூட்டணிக்குள் எந்தவொரு இடைவெளியும் உருவாகவில்லை. இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் தமிழக பாஜகவுக்குள் உறுப்பினா்கள் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும். கிளைத் தோ்தல், மண்டல, மாவட்ட, மாநிலத் தோ்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த தினத்தை ஒட்டி, தமிழகத்திலும் பாதயாத்திரையை பாஜக சாா்பில் நடத்தி வருகிறோம். பாஜக தலைவா்கள் கலந்து கொண்டுள்ளனா். எனவே, இடைத் தோ்தல் பிரசாரத்துக்கும் முழுமையாக நேரம் ஒதுக்க முடியாததையும் கூறியுள்ளோம் என்றாா் பொன் ராதாகிருஷ்ணன்.

முன்னதாக, அமைச்சா் ஜெயக்குமாருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மூத்த தலைவா் இல.கணேசன், தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளா் வானதி சீனிவாசன், பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com