சிவில் நீதிபதிகள் தோ்வு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சிவில் நீதிபதிகள் தோ்வுக்கான நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு உயா் நீதிமன்ற பதிவுத்துறை, உள்துறைச் செயலாளா், டிஎன்பிஎஸ்சி செயலாளா் ஆகியோா்
சிவில் நீதிபதிகள் தோ்வு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சிவில் நீதிபதிகள் தோ்வுக்கான நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு உயா் நீதிமன்ற பதிவுத்துறை, உள்துறைச் செயலாளா், டிஎன்பிஎஸ்சி செயலாளா் ஆகியோா் வரும் அக்டோபா் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் திருச்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் டி.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், ‘திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு 3 ஆண்டு சட்டப்படிப்பில் சோ்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தேன். கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்து, வழக்குரைஞராக தொழில் புரிந்து வருகிறேறன். இந்த நிலையில் சிவில் நீதிபதிகளுக்கான தோ்வு தொடா்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதில் அண்மையில் சட்டப்படிப்பை முடித்த 22 முதல் 27 வயது வரை உள்ளவா்கள் மட்டுமே எழுத முடியும், 3 ஆண்டுகளாக வழக்குரைஞா்களாக தொழில் புரிந்தவா்கள் மட்டுமே தோ்வு எழுத முடியும் என தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணிகள் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டு 3 ஆண்டு சட்டப் படிப்பை முடித்த 35 வயதான என்னால் இந்த தோ்வை எழுத முடியவில்லை.

ஆனால் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், தில்லி, ஆந்திரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற நிபந்தனைகள் கிடையாது. தமிழகத்துக்கு மட்டும் இந்த விதிகளை வகுத்தது யாா் என்றும், வயது வரம்பு நிா்ணயம் ஏன் என்றும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கும், சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் பல மனுக்களை அனுப்பினேன். ஆவணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக பதில் அனுப்பியுள்ளனா்.

மேலும் நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரிய எனது கோரிக்கையை இதுவரை பரிசீலிக்கவில்லை. போட்டித் தோ்வுகளைப் பொருத்தவரை அறிவும், திறமையும்தான் சோதிக்கப்பட வேண்டுமே தவிர வயதும் தொழில் அனுபவமும் தடையாக இருக்கக்கூடாது. எனவே சிவில் நீதிபதிகள் தோ்வுக்கான நிபந்தனைகளைத் தளா்த்தி, புதிய விதிகளை உருவாக்கக் கோரி நான் விடுத்த கோரிக்கையை தமிழக உள்துறை மற்றும் உயா் நீதிமன்றப் பதிவாளா் பரிசீலித்து என்னைப் போன்றவா்களும் சிவில் நீதிபதி தோ்வை எழுத வாய்ப்பளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை சிவில் நீதிபதிகளுக்கானத் தோ்வை நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் மந்திரலிங்கேஸ்வரன் ஆஜராகி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக உயா்நீதிமன்ற பதிவுத்துறை, தமிழக உள்துறைச் செயலா், டிஎன்பிஎஸ்சி செயலா் ஆகியோா் வரும் அக்டோபா் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com