திருச்சி நகை திருட்டு: தனிப்படை ஆந்திரம் விரைவு

திருச்சி நகைக்கடை திருட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருவாரூர் முருகனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
திருச்சி நகை திருட்டு: தனிப்படை ஆந்திரம் விரைவு

திருச்சி நகைக்கடை திருட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளியான திருவாரூர் முருகனைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.
 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக் கடை கடையில் ரூ. 13 கோடி மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்றது தொடர்பாக 7 தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
 இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், விளம்பல் பகுதியில் நகர போலீஸார் வாகன தணிக்கையின்போது பைக்கில் வந்த இருவரில் நகைகள் இருந்த பெட்டியை சீராத்தோப்பு சுரேஷ் வீசிவிட்டு தப்பியோடிவிட, மடப்புரம் மணிகண்டன் சிக்கினார். அட்டைப் பெட்டியில் இருந்த 4.25 கிலோ நகைகள் திருச்சி நகைக்கடையில் திருடப்பட்டவை எனத் தெரிய வந்தது.
 இதைத் தொடர்ந்து தப்பியோடிய சுரேஷை பிடிக்க மணிகண்டன், அவரது தாய் கனகவள்ளி மற்றும் நெருங்கிய நண்பர்களைப் பிடித்து திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
 3 நாள் விசாரணைக்கு பிறகு மணிகண்டன், சுரேஷ் தாய் கனகவள்ளி ஆகிய இருவரையும் திருச்சி நடுவர் நீதிமன்றம் எண். 2 இல் நீதிபதி திரிவேணி வீட்டில் சனிக்கிழமை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து நகை, இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 இத்திருட்டு சம்பவத்தில் 7 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்புடையதாகக் கருதப்படும் நிலையில் அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்சி மண்டல காவல் துறைத் தலைவர் வரதராஜூ உத்தரவின்பேரில் திருவாரூர், நாகை, தஞ்சாவூர் பகுதிகளில் வாகனத் தணிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
 நகைக்கடை திருட்டில் முக்கிய நபராகக் கருதப்படும் திருவாரூர் முருகனை பிடிப்பது போலீஸாருக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
 தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் முருகன் மீது ஏராளமாக குற்ற வழக்குகள் இருந்தாலும் சொற்ப வழக்குகளில் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க உதவிடும் செல்லிடப்பேசியை முருகன் பயன்படுத்துவதில்லை என்பதால் அவர் இதுவரை சிக்காமல் உள்ளார்.
 தமிழகத்தில் திருட்டு, கொள்ளைகளில் முருகன் கும்பல் ஈடுபட்டால் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு தனி நபராகத் தப்பிவிடுவது முருகன் வழக்கம்.
 அந்த வகையில் திருச்சி நகைக்கடை திருட்டில் மூளையாகச் செயல்பட்டு திட்டம் நிறைவேறிய பிறகு நகைகளை கும்பலுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு தப்பியிருக்கலாம் எனக் கருதி தனிப்படை போலீஸார் அண்டை மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.
 இத்திருட்டு வழக்கில் மணிகண்டனைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முயன்ற போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால் மற்ற குற்றவாளிகளைக் கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 உல்லாச வாழ்க்கையால் சீரழிந்த முருகன்
 தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் திருடப்படும் நகை, பணத்தை தனது உல்லாச வாழ்க்கைக்கே பெரிதும் செலவிட்டுள்ளார் முருகன். கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தில் தெலுங்கில் சினிமா எடுத்த முருகன் அதில் தனது அக்கா மகன் சுரேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார். பணப்பிரச்னையால் அந்த படம் எடுப்பது கைவிடப்பட்டது. முருகனுக்கு குடும்பம் இல்லாத நிலையில் அவர் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும் தனது ஊரில் ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் சிறிது தொகையைச் செலவிட்டு வந்துள்ளார். ஆண்டில் ஒரு சில நாள்களைத் தவிர மற்ற நாட்களில் சொகுசு விடுதி, ஹோட்டல்களில் தங்கியே வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.
 உதவிக்குப் போய் சிக்கிக் கொண்ட மணிகண்டன்
 திருவாரூரில் நடைபெற்ற வாகன தணிக்கையின்போது வியாழக்கிழமை இரவு சிக்கிய மணிகண்டனிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சுரேஷ் தஞ்சாவூரில் இருந்து தன்னை உதவிக்கு அழைத்தாகவும், அதன் பேரிலேயே தன்னுடைய பைக்கில் சுரேஷை அழைத்து வந்தபோது சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சுரேஷ் வைத்திருந்த அட்டைப் பெட்டியில் தங்கம் இருப்பது தனக்குத் தெரியாது என்றும், நகை திருட்டில் தனக்குத் தொடர்பில்லை எனவும் கூறி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சி போலீஸார் மணிகண்டனை சனிக்கிழமை சிறையில் அடைத்தனர்.
 திருச்சி தனியார் வங்கி கொள்ளையிலும் தொடர்பு
 கடந்த ஜனவரியில் திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ளதனியார் வங்கி சுவரைத் துளையிட்டு 500 பவுன் நகை, ரூ. 10 லட்சம் திருடு போனது. இந்தத் திருட்டிலும், திருச்சி நகைக் கடை திருட்டிலும் ஒரே குழு ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com