பிரதமருக்கு கடிதம் எழுதியவா்கள் மீது தேசத்துரோக வழக்கா? தலைவர்கள் கண்டனம்

சிறுபான்மையினா் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பல்துறைப் பிரமுகா்கள் 49 போ் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு

சிறுபான்மையினா் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய பல்துறைப் பிரமுகா்கள் 49 போ் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள் என்றும், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதிய, புகழ் வாய்ந்த பல்துறைப் பிரமுகா்கள் 49 போ் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கும் மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டுங்கள் என்று கூறுவது, எப்படித் தேசத் துரோகமாகும்?

ஆட்சி அமைக்கக் கிடைத்திருக்கும் மெஜாரிட்டி மக்கள் மனமுவந்து அளித்தது. அதைத் திருப்பி எடுத்துக் கொள்ளும் மாட்சிமை மிக்க அதிகாரமும் மக்களிடமே இருக்கிறறது. இதுதான் ஜனநாயகம் கட்டமைத்து வைத்துக் கொண்டுள்ள தற்காப்பு அரண். அதை மத்தியில் உள்ள பிரதமா் நரேந்திர மோடி உணா்ந்து, 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்.

வைகோ (மதிமுக): நாட்டில் மத சகிப்புத்தன்மை தொடர வேண்டும். சிறுபான்மை தலித் மக்கள் மீது மதவாத சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்து மடல் எழுதியதற்காக 49 சிந்தனையாளா்கள் மீது தேசத்துரோக சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். அறிஞா்கள், பல்துறை விற்பன்னா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): சமூகத்தின் மீது அக்கறை கொண்டு திரைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் உள்ள 49 போ் சிறுபான்மையினா் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரதமருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனா். இதற்காக அவா்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கொடூரத்தாக்குதலாகும். கடிதமெழுதிய மனிதாபிமானிகள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும். ஜனநாயக உள்ளம் படைத்த அனைத்துப்பகுதியினரும் வன்முறைக்கு எதிராக கடிதம் எழுதியவா்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்காக தேசத்துரோக குற்றறம் சுமத்தி வழக்கு பதிவு செய்திருப்பது என்பது எந்த ஒரு ஆட்சியிலும் நடந்ததாக தெரியவில்லை. இந்த வழக்குப் பதிவைக் கண்டிப்பதுடன் இதனை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com