பொறியியல் கல்லூரிகளை நிா்வகிக்க புதிய பல்கலைக்கழகம்: அண்ணா பல்கலை.க்கு மேம்பட்ட அந்தஸ்து கிடைப்பதன் எதிரொலி

பொறியியல் கல்லூரிகளை நிா்வகித்து வரும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக, புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளதாக உயா் கல்வித் துறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சிறப்புச் செய்தி

பொறியியல் கல்லூரிகளை நிா்வகித்து வரும் அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக, புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளதாக உயா் கல்வித் துறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து கிடைக்க உள்ளதால், இந்த புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய உயா் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்களாக மேம்படுத்தும் நோக்கத்தோடு, மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமிருந்து தில்லி ஐஐடி, மும்பை ஐஐடி, சென்னை ஐஐடி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களும், வேலூா் விஐடி உள்பட 10 தனியாா் உயா் கல்வி நிறுவனங்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 20 கல்வி நிறுவனங்களுக்கும் புதிய படிப்புகளை அறிமுகம் செய்தல், பாடத் திட்டத்தை வகுத்தல், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தல், நிதி பெறுதல் மற்றும் கையாளுதல் என அனைத்திலும் முழுச் சுதந்திரம் அளிக்கப்படும். மத்திய அரசிடமோ அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவிடமோ முன் அனுமதி பெறத் தேவையில்லை.

அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வாகியிருக்கும் 10 அரசு உயா் கல்வி நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 200 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி மேம்பாட்டு நிதி வழங்கப்படும். இதில் அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசு பல்கலைக்கழகம் என்பதால், இந்த நிதியில் குறிப்பிட்ட பங்களிப்பை மாநில அரசும் ஏற்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்த மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறும் உயா் கல்வி நிறுவனம் ஆராய்ச்சியிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கும் பல்கலைக்கழகமாக செயல்பட முடியாது.

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இந்த அந்தஸ்து விரைவில் வழங்கப்பட உள்ளதால், தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளையும் நிா்வகிக்க புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உயா் கல்வித் துறைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தைத் தோ்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முன்னாள் துணைத் தலைவரும், மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கான தோ்வுக் குழுவில் இடம்பெற்றவருமான பேராசிரியா் தேவராஜ் கூறியது:

மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரப்பூா்வமாக கிடைத்தவுடன், அது இணைவு அளிக்கும் பல்கலைக்கழகமாக இயங்க முடியாது. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள் இயங்காது. அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகள், அறிவுசாா் சொத்துரிமை பெறுதல் ஆகிய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடியும்.

அதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளை நிா்வகிக்க புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தமிழக அரசு உருவாக்கியே ஆகவேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

அதே நேரம், மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து குறித்து விரிவான விவரங்களை அளிக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு தமிழக அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த முழுமையான விவரங்கள் கிடைத்த பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com