
கொடைக்கானலில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறையாக இருப்பதால் தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், பியர் சோழா அருவி, ரோஜாத் தோட்டம், பேரி பால்ஸ், வட்டக்கானல் அருவி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனால் லாஸ்காட் சாலை, டோல்கோட் பகுதி, பெருமாள் மலை, அண்ணா சாலை, ஏரிச் சாலை, உட்வில் சாலை, அப்சர்வேட்டரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 15-நாள்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த இரண்டு நாள்களாக மழையில்லாமல் இருந்த நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையிலும் சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர்.
விடுதி கட்டணம் பல மடங்கு உயர்வு: கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகளில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சுமார் 350-தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது சுமார் 50-தங்கும் விடுதிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் "ஆன்-லைன்' முன்பதிவு மூலமாகவே சுற்றுலாப் பயணிகளுக்கு அறை ஒதுக்கப்படுகிறது.
அதேநேரத்தில் அனுமதியில்லாத தனியார் காட்டேஜ்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 4-பேருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ. 4ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதேபோன்று சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் போது உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.
எனவே விடுதிகளையும், உணவகங்களையும் அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.