
சீன அதிபரின் மாமல்லபுரம் வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த, திபெத்தைச் சேர்ந்த இளைஞரை ஆரோவில் அருகே போலீஸார் கைது செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் வருகிற 11-ஆம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 3 நாள் பயணமாக இந்தியா வரும் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட திபெத் இளைஞர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாக, மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் புதுச்சேரி அருகே தங்கியிருப்பது தெரிய வந்தது.
இதனிடையே, அந்த இளைஞர் தங்குவதற்கு அறை வசதி தேடி, விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே கோட்டக்குப்பத்துக்கு சனிக்கிழமை வந்தார். அப்போது, அவரை கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் திபெத் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான டென்சின் சுண்டே(38) என்பதும், திபெத் மீதான சீனாவின் நெருக்கடியைக் கண்டித்து, சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.