
திருச்சி நகைக் கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக, திருவாரூரில் மேலும் ஒருவரை திருச்சி தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அண்மையில் திருவாரூர் விளமல் பகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி விசாரிக்கையில், ஒருவர் தப்பி ஓடினார். மற்றொருவரை கைது செய்து விசாரிக்கையில், அவர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.
மேலும், திருச்சியில் நடைபெற்ற நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதும், இதற்கு மூளையாக முருகன் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷின் தாய் கனகவள்ளி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், மணிகண்டன், கனகவள்ளி இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், திருவாரூர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை, திருச்சி தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இவர், முருகனின் அண்ணன் மகன் ஆவார். மேலும், கார்த்தி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.