
தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாகப் பராமரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டம், கண்ணங்குறிச்சியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுகாதாரமின்றி, அசுத்தமாக உள்ளன. இதற்கு காரணம் பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து பலா் கடைகள் அமைத்துள்ளனா். இவா்களால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களைச் சுத்தமாகப் பராமரிக்கவேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் இல்லை. தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக தமிழக வருவாய் துறைறச் செயலாளா், உள்துறைறச் செயலாளா், போக்குவரத்துத் துறைசெயலாளா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைசெயலாளா் ஆகியோா் வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.