
மக்கள் நலனில் அக்கறையில்லாமல் சுயநலத்துடன் செயல்பட்டு இடைத்தேர்தலை உருவாக்கியுள்ள காங்கிரஸ் கட்சியை புறக்கணித்துவிட்டு அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெ.நாராயணனுக்கு ஆதரவாக கீழநத்தம் ஊராட்சிக்குள்பட்ட மேலகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தபோது அவர் பேசியது:
தமிழக பெண்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அலாதியான பற்று கொண்டவர்கள். அவர் கொண்டுவந்த அனைத்து கனவுத் திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. எதிர்க்கட்சிகளின் அனைத்து அவதூறு பேச்சுகளையும் புறந்தள்ளிவிட்டு பாட்டாளி மக்களின் தோழனாக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது நான்குனேரி தொகுதி மக்கள் 5 ஆண்டுகள் பணி செய்வதற்காக ஹெச்.வசந்தகுமாரை தேர்ந்தெடுத்தனர். ஆனால், மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாமல் சுயநலத்துடன் செயல்பட்டு இத்தொகுதிக்கு இடைத்தேர்தலை உருவாக்கியுள்ள காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
சாதாரண ஏழைத் தொண்டரை களமிறக்கியுள்ள அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றியைப் பரிசளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை மக்கள் சந்திக்க இயலாது. ஆகவே, இத்தொகுதியின் மண்ணின் மைந்தரான வெ.நாராயணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.