
மாமல்லபுரத்தில் மோடி- ஷி ஜின்பிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னை, பயங்கரவாத ஒழிப்பு, வர்த்தகம், இருதரப்பு உறவு ஆகிய விஷயங்கள் முக்கிய அம்சங்களாக இடம் பெற வாய்ப்பு இருப்பதாக வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் வரும் அக்.11முதல் 13 வரை சந்தித்துப் பேச உள்ளனர். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சந்திப்பு கருதப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு குறித்த கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசியல் விமர்சகர் லாரன்ஸ் பிரபாகர், வெளியுறவுக் கொள்கை நிபுணர் சேஷாத்ரி சாரி, கடற்படை முன்னாள் அதிகாரி சேஷாத்ரி வாசன் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
லடாக் பகுதியை ஒட்டிய இந்திய- சீன எல்லைப் பிரச்னை, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள், கடல்சார் வளங்களின் மூலம் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்யும் ஒப்பந்தங்கள், சீனாவின் 5ஜி கொள்கை உள்ளிட்ட விஷயங்கள் இந்தப் பேச்சு வார்த்தையில் முக்கிய அம்சங்களாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கு இந்தப் பேச்சுவார்த்தையின் போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
மேலும் இரு நாடுகளுக்கிடையே உயர்கல்விக்கான மாணவர் பரிமாற்றம் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பிருப்பதாக கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.