லலிதா ஜுவல்லரி கொள்ளைத் தலைவன் முருகனின் பின்னணி என்ன?

கொள்ளைத் தலைவன், படத்தயாரிப்பில் ஈடுபாடு, பல மொழிகள் என `பன்முக' நபராக விளங்கியிருக்கும் முருகன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
லலிதா ஜுவல்லரி கொள்ளைத் தலைவன் முருகனின் பின்னணி என்ன?

கொள்ளைத் தலைவன், படத்தயாரிப்பில் ஈடுபாடு, பல மொழிகள் என `பன்முக' நபராக விளங்கியிருக்கும் முருகன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் போலீஸாரிடம் பிடிபட்டார். மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் சென்றபோது, போலீஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். அப்போது, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்த மற்றொரு கொள்ளையன் சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். மணிகண்டனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளைக்கும்பல் தலைவனாக திருவாரூரைச் சேர்ந்த முருகன் செயல்பட்டுவந்தது தெரியவந்தது.

முருகன் தலைமையிலான கும்பல் தென் மாநிலம் முழுவதுமே கைவரிசையைக் காட்டியுள்ளது. பெங்களூரில் முதலில் கொள்ளையில் ஈடுபட்டு, பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்ட முருகன், பின்னர் தன் ஜகாவை ஆந்திராவுக்கு மாற்றிக்கொண்டான். முருகன் ஒரு சினிமா பைத்தியம் என்று சொல்லப்படுகிறது. கொள்ளையடிக்கும் பணத்தைக் கொண்டு, ரூ.50 லட்சம் செலவில் தெலுங்குப் படத்தைத் தயாரித்துள்ளார். பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால், முருகனை ஹெச்.ஐ.வியும் தாக்கியுள்ளது.

ஒரு முறை, ஆந்திராவில் மக்பூப் நகர் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்ட முருகன் கும்பல் பிடிபட்டது. ஆனால், ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீனில் வெளிவரும் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. ஆந்திர கொள்ளைச் சம்பவத்தில் ஜாமீனில் வெளிவந்த பிறகு, சென்னை அண்ணாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டுள்ளது

திருவாருர் சீராதோப்பு பகுதியில்தான் முருகனின் காதலி மஞ்சு வசித்து வருகிறார். சொந்த ஊரில் சாக வேண்டுமென்பது முருகனின் ஆசையாம். திருவாரூர் மாவட்டத்தில் முருகன் மீது எந்த வழக்கும் இல்லை. பல மொழிகள் சரளமாகப் பேசவும் தெரியும். சொந்த ஊருக்கு வரும்போது, கண்ணில் பார்க்கும் மக்களுக்குப் பண உதவிகள் செய்து வந்துள்ளார். இதனால், கொள்ளைச் சம்பவங்களில் முருகன் ஈடுபடுவது தெரிந்தாலும், சொந்த ஊர் மக்கள் அவரை காட்டிக் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

பார்ப்பதற்குப் பரிதாபமாக ஒல்லியாக காணப்படும் முருகன் திட்டமிட்டுக் கொள்ளையடிப்பதில் திறமையாகச் செயல்படுவார் என்றும் போலீஸார் கூறுகின்றனர். தப்பியோடிய சுரேஷ் , முருகனின் அக்காள் மகன் ஆவார். சுரேஷையும் கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com