குஜராத்தைப் போல சலுகையை எதிர்நோக்கும் தமிழக உப்பு உற்பத்தியாளர்கள்!

குஜராத் மாநிலத்தைப் போல தங்களுக்கும் குறிப்பிட்ட சில சலுகைகள் வழங்கப்பட்டால், உப்பு உற்பத்தியில் முன்னிலை பெறமுடியும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
குஜராத்தைப் போல சலுகையை எதிர்நோக்கும் தமிழக உப்பு உற்பத்தியாளர்கள்!

தூத்துக்குடி: குஜராத் மாநிலத்தைப் போல தங்களுக்கும் குறிப்பிட்ட சில சலுகைகள் வழங்கப்பட்டால், உப்பு உற்பத்தியில் முன்னிலை பெறமுடியும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழகம் 2-ஆவது இடத்திலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த நிலைகளிலும் உள்ளன.

தமிழகத்தில் ஏறத்தாழ 51 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில், 17,500 ஏக்கர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உப்புத் துறைக்கு சொந்தமான இடம். தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம், வாலிநோக்கம் ஆகிய இடங்களில் அதிகளவு உப்பு உற்பத்தியாகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி என்பது தமிழகத்தின் இலக்காக உள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த உற்பத்தி அளவு குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை உப்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் வழங்கப்படுவது போன்ற சலுகைகளை தமிழக அரசும் வழங்கினால், உப்பு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற முடியும் என்பது உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர் எஸ். பேச்சிமுத்து கூறியது: கடந்த 2000-ஆவது ஆண்டு வரை தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மலேசியா, தென் கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதேபோல, ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா போன்ற வடமாநிலங்களுக்கு லாரிகளில் மட்டுமல்லாது, ரயில்களிலும் ஆயிரக்கணக்கான டன் உப்பு அனுப்பப்பட்டு வந்தது.

ஆனால், உப்பு ஏற்றுமதி ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் அல்லது 30 ஆயிரம் டன் என மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் மொத்தமாக உப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் இருந்து ஒருமுறைகூட ரயிலில் உப்பு எந்த மாநிலத்துக்கும் மொத்தமாக கொண்டு செல்லப்படவில்லை.

இதுமட்டுமல்லாது, கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழக வரலாற்றில் முதன்முறையாக தூத்துக்குடி துறைமுகத்தில் உப்பு இறக்குமதி செய்யப்பட்டது, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக தமிழக உப்பை நம்பி இருந்த ஆந்திரம், கர்நாடகம், ஒடிஸா மட்டுமல்லாது இலங்கை, கொரியா, இந்தோனேசியா, மலேசியா போன்ற அனைத்து பகுதிகளையும் தற்போது குஜராத் மாநில உப்பு ஆக்கிரமித்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, குஜராத் மாநிலத்தில் உள்ள உப்பளங்களைப் பார்வையிட கடந்த 2009-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இருந்து உப்பு உற்பத்தியாளர்கள் குழு அந்த மாநிலத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டது. அங்குள்ள உப்பளங்களுக்கு மாநில அரசு செய்துகொடுத்துள்ள பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குஜராத் உப்பளங்கள் அனைத்திலும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உப்பளங்களுக்கு உள்ளேயே ரயில்கள் செல்வதால் குறைந்த கூலியில் உப்பு ஏற்றலாம். தூத்துக்குடியில் அந்த வசதி இல்லை. உப்பு மூட்டைகளை லாரிகளில் ஏற்றி ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கே இறக்கி பிறகு தள்ளு வண்டியில் உப்பு மூட்டைகளை கொண்டு சென்று ரயிலில் ஏற்ற வேண்டும். இதனால், உப்பை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல அதிக செலவாகிறது.

இதேபோல, குஜராத் உப்பளங்களில் உப்பு குவித்து வைக்கப்பட்டிருக்கும் (அம்பாரம்) இடத்துக்கு அருகே சென்று கண்டெய்னர் லாரிகளில் உப்பு ஏற்றும் வசதி உள்ளது. தூத்துக்குடி மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள வேறு எந்த உப்பளங்களிலும் இந்த வசதி இல்லை.

உப்பளங்களிடையே தரமான சாலைகளும், கழிவுநீர் வெளியேற சிறந்த வடிகால் வசதியும் குஜராத் மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. இதனால், கப்பலில் உப்பு ஏற்றுவது அங்கு எளிது. இங்குள்ள மாநில அரசு உப்பு உற்பத்தியாளர்களுக்கு அதுபோன்ற கட்டமைப்புகளை செய்துகொடுத்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

இதைவிட, முக்கியமாக குஜராத் மாநிலத்தில் வீடுகளுக்கான இணைப்புகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தைப் போல வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்குள்ள உப்பளங்களில் தற்போது மின்சார கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 4.50 தான். எத்தனை யூனிட் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், தமிழக உப்பளங்களில் மின் கட்டணம் யூனிட் ஒன்று 10 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒரு உப்பு உற்பத்தியாளர் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் மின் கட்டணம் செலுத்தினால், குஜராத்தில் வசிக்கும் அதே உற்பத்தித் திறன் கொண்ட உப்பு உற்பத்தியாளர் ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் குறைவாக மின் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

தமிழகத்தில் உப்பு உற்பத்தி செலவு டன் ஒன்றுக்கு ரூ. 600 வரை ஆகிறது. ஆனால், குஜராத் மாநிலத்தில் டன் ஒன்றுக்கு ரூ. 200 மட்டுமே செலவாகிறது.
 கடந்த 2001 -ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக மோடி பொறுப்பேற்றது முதல் அங்குள்ள உப்பளங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுத்ததும், குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கியதும்தான் அந்த மாநிலத்தை உப்பு உற்பத்தியில் முன்னணி இடத்தைப் பிடிக்க காரணங்களாக அமைந்தன.

எனவே, குஜராத் மாநிலத்தைப்போல தமிழகத்தில் உள்ள உப்பு உற்பத்தியாளர்களுக்கும் சலுகை விலையில் மின்சாரம், உப்பளங்களில் கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுத்தால் தமிழகம் உப்பு உற்பத்தியில் மீண்டும் நிச்சயமாக முன்னிலை இடத்தை பெறமுடியும் என்றார் அவர்.

- தி. இன்பராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com