தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடவேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தீபாவளிக்கு முந்தைய  நாளான சனிக்கிழமை வேலை நாள் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அந்தநாளை


தீபாவளிக்கு முந்தைய  நாளான சனிக்கிழமை வேலை நாள் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அந்தநாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
நிகழாண்டுக்கான தீபாவளிப் பண்டிகை வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள்  சொந்த மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள், சொந்த ஊர்களுக்குச் செல்ல குறைந்தது இரண்டு நாள்களாவது விடுமுறை தேவை. இந்தநிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு அக்.27-ஆம் தேதி ஒருநாள் மட்டுமே விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.  இதுமட்டுமல்லாமல்  27-ஆம் தேதிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் வேலை நாள் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் 26-ஆம் தேதி சனிக்கிழமையை விடுமுறையாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ரயில்-பேருந்துகளில் முன்பதிவு:  இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:  தீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை முழுநேர வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், வெளியூரில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு ஏதுவாக வெள்ளிக்கிழமை இரவே புறப்படுவதற்கு ரயில், பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற ஒரு அறிவிப்பு, ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே சனிக்கிழமை வேலைநாளாக இருந்தாலும்,  அன்றைய தினம் மாணவர்களின் வருகை குறைவாகத்தான் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அன்றைய தினம் விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில்...: கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.  சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்கள் முன்கூட்டியே பயணிக்க வேண்டும். எனவே முந்தைய நாளை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். 
இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு நவம்பர் 5-ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com