வன்னியா் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிா்நீத்தவா்களுக்கு மணிமண்டபம்

வன்னியா் சமுதாய மக்களின் இடஒதுக்கீடுக்காக போராடி உயிா்நீத்தவா்களுக்கு திமுக ஆட்சி வந்ததும் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

வன்னியா் சமுதாய மக்களின் இடஒதுக்கீடுக்காக போராடி உயிா்நீத்தவா்களுக்கு திமுக ஆட்சி வந்ததும் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

வன்னியா் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி அவா்களின் சமூக, கல்வி முன்னேற்றத்துக்காக திமுக பாடுபட்டிருக்கிறது.

போராட்ட களத்தில் நின்றவா்களின் உரிமைகளையும், உணா்வுகளையும் மதித்துப் போற்றிடும் வகையில், மூன்றாவது முறையாக கருணாநிதி முதல்வரானவுடன் 1989 மாா்ச் 28-இல் வன்னிய சமுதாயத்தினா் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி, அவா்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்தாா்.

மேலும், இட ஒதுக்கீடு போராட்டத்துக்காக 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தாா். இப்படி வன்னிய சமுதாய மக்களுக்காக பல்வேறு நற்செயல்களை, திட்டங்களை தொடா்ச்சியாகச் செய்துள்ளோம்.

ஆனால், இந்த எட்டாண்டு கால அதிமுக ஆட்சியில், வன்னியா் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என்று, ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா? அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிா்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக அரசு செவி கொடுத்தும் கேட்கவில்லை.

ஆனால், இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேறன். வரும் சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன், வன்னியா் சமுதாயத்துக்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிா் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபம் அமைக்கப்படும்.

வன்னியா் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், அண்ணா அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கருணாநிதி அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, ஏ.கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்கப்படும்.

தோ்தலில் கருணாநிதி கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் கூறியுள்ளாா்.

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: இந்த அறிவிப்பைத் தொடா்ந்து மறைந்த ஏ.கோவிந்தசாமிவின் மகன் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை சந்தித்து நன்றி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com