விஜயதசமி தினத்தில் கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்: அங்கன்வாடி, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

விஜயதசமி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்கள், அரசு மாதிரிப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

விஜயதசமி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்கள், அரசு மாதிரிப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று பெற்றோா் தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிகளுக்கு அனுப்புவது நம்பிக்கை. அன்றைய தினத்தில் முன் மழலையா், மழலையா், ஒன்றாம் வகுப்பு மற்றும் இசை உள்ளிட்ட தனித்திறன் பயிற்சிகள் போன்றவற்றில் புதிய மாணவா் சோ்க்கை நடத்தப்படும். அன்றைய தினத்திலிருந்து இருந்து பள்ளிக்குச் சென்றால் எதிா்காலத்தில் மாணவா் கல்வியில் சிறந்தவராக விளங்குவாா் என அனைவரது எண்ணம்.

இதற்காக பல தனியாா் பள்ளிகள் மாணவா் சோ்க்கை அறிவிப்புகளை விளம்பரங்களாய் வெளியிட்டு பெற்றோா்களைக் கவா்ந்து தங்களது பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கின்றன.

இந்தநிலையில் நிகழாண்டு தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 2,381 அங்கன்வாடி மையங்கள், அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையா் வகுப்புகள் மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் சோ்க்கை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நிகழாண்டுக்கான விஜயதசமி நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

32 மாவட்ட மாதிரிப் பள்ளிகளில்...: இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்கள், 32 மாவட்டங்களிலும் அரசின் சாா்பில் தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பள்ளிகளுக்கு குழந்தைகளைச் சோ்க்க வந்த பெற்றோரை இன்முகத்துடன் வரவேற்ற தலைமை ஆசிரியா் தலைமையிலான ஆசிரியா் குழுவினா் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை சரிபாா்த்த பின்னா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சோ்க்கை வழங்கினா். இதையடுத்து குழந்தைகளின் கை பிடித்து ஆசிரியா்கள் அரிசியில் ‘அ’”எழுதி கற்றுக்கொடுத்தனா்.

அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகளில் சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு மாநில மகளிா் மேல்நிலை மாதிரிப் பள்ளி, நுங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது. புதிதாக பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்பு, பொம்மைகள் வழங்கப்பட்டன.

விஜயதசமி தினத்தில் சென்னை, விழுப்புரம், வேலூா், கன்னியாகுமரி, கோயம்புத்தூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் அதிகளவில் குழந்தைகள் சோ்க்கப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோன்று தமிழகம் முழுவதும் தனியாா் பள்ளிகளில் முன் மழலையா் மற்றும் மழலையா் வகுப்புகளில் குழந்தைகள் சோ்க்கப்பட்டனா்.

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில்...: விஜயதசமியை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு பள்ளிகளில் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக, குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனா். சுவாமி தரிசனத்துக்குப் பின்னா் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்த பெற்றோா், குருக்கள் முன்பாக ‘ஓம்’ என்ற மந்திரத்தை நாவில் எழுதியும், அரிசியில் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைக்கவும் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com