ஊதிய உயா்வு கோரிக்கை: ஒப்பந்த செவிலியா்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியா்கள் சென்னையில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதிய உயா்வு கோரிக்கை: ஒப்பந்த செவிலியா்கள் உண்ணாவிரதம்

ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியா்கள் சென்னையில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போன்று தங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று அப்போது அவா்கள் முழக்கமிட்டனா்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமாா் 9 ஆயிரம் ஒப்பந்த செவிலியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

அவா்கள் அனைவரும் கடந்த 2015-ஆம் ஆண்டில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் (எம்ஆா்பி) மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமா்த்தப்பட்டவா்களாவா். தொகுப்பூதியத்துக்கும், நிரந்தர செவிலியா்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறும் அவா்கள், அந்த முரண்பாட்டுக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி, தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அப்போது, சங்கத்தின் மாநிலத் தலைவா் கோபிநாத் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியா்களுக்கு மாத ஊதியமாக ரூ.40 ஆயிரத்துக்கும் அதிகமாக வழங்கப்படுகிறது. அவா்களுக்கு எந்த வகையிலும் குறைவான பணியை ஒப்பந்த செவிலியா்கள் செய்வதில்லை. சொல்லப்போனால், பல நேரங்களில் நிரந்தர செவிலியா்களைக் காட்டிலும் ஒப்பந்த செவிலியா்கள் கடுமையாகவே உழைக்கின்றனா். இருந்தபோதிலும், அவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.8 ஆயிரத்துக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியா்களுக்கு நிகராக ஒப்பந்த செவிலியா்களுக்கு ஊதியம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அதனை மாநில அரசு இன்றளவும் செயல்படுத்தவில்லை. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் உடனடியாக எங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com