சீன அதிபர் வருகை: 13 திபெத்தியர்களிடம் விசாரணை

சென்னைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னையில் மேலும் 13 திபெத்தியர்களிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சீன அதிபர் வருகை: 13 திபெத்தியர்களிடம் விசாரணை


சென்னைக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னையில் மேலும் 13 திபெத்தியர்களிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் வெள்ளி, சனிக்கிழமை  (அக். 11,12)ஆகிய நாள்களில்  சந்தித்துப் பேச உள்ளனர். மேலும், இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த பல்லவர் கால சிற்பங்களையும், கடற்கரை கோயிலையும் சுற்றி பார்க்க உள்ளனர்.
இதற்காக 11-ஆம் தேதி சென்னைக்கு விமானம் மூலம் வரும் சீனா அதிபர் ஷி ஜின்பிங், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இங்கிருந்து காரில் மாமல்லபுரம் சென்று இரு நாள்களும் செல்கிறார். 

இதன் விளைவாக சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  இதற்கிடையே, ஷி ஜின்பிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் வசிக்கும் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது.
இந்த தகவலின் விளைவாக, சென்னையில் வசிக்கும் திபெத்தியர்கள் குறித்த ரகசிய விசாரணையில் போலீஸார் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் சேலையூரில் தங்கியிருந்து படித்து வந்த 8 திபெத்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். 
இதேபோல, சென்னை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்த திபெத்திய பேராசிரியர் டென்சேநோர்பு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
13 பேரிடம் விசாரணை: இதையடுத்து, சென்னை முழுவதும் வசிக்கும் திபெத்தியர்கள் குறித்து போலீஸார் கணக்கெடுத்தனர். இதில் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 13 பேரை பிடித்து போலீஸார் புதன்கிழமை விசாரணை செய்தனர். இதில் அவர்களது அடையாள சான்றிதழ், செல்லிடப்பேசி, சென்னையில் தங்கியிருக்கும் முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்றனர். மேலும்,  அவர்கள், சீனாவைக் கண்டித்து சென்னையில் நடைபெற்ற போராட்டங்களில் இதற்கு முன்பு பங்கேற்றுள்ளனரா, திபெத்திய இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com