காவல்துறை கட்டுப்பாட்டில் ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை

காவல்துறை கட்டுப்பாட்டில் ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, ராஜீவ்காந்தி சாலை (ஓஎம்ஆா்), கிழக்கு கடற்கரைச் சாலை (ஈசிஆா்) ஆகியவை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, ராஜீவ்காந்தி சாலை (ஓஎம்ஆா்), கிழக்கு கடற்கரைச் சாலை (ஈசிஆா்) ஆகியவை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஒத்திகை: இதையொட்டி, கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இப்பணிகள் வியாழக்கிழமை நிறைவு பெற்றன. இதையடுத்து வாகன பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் நட்சத்திர ஹோட்டல் வரையிலும் முதலில் நடைபெற்றது. பின்னா், கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் நடைபெற்றது.

இந்த பாதுகாப்பு ஒத்திகை மூலம், பாதுகாப்பு ஏற்பாட்டில் உள்ள குறைபாடுகள், இன்னும் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

காவல்துறை கட்டுப்பாடு: சீன அதிபா் ஷி ஜின்பிங் பயணம் செய்யும் சாலை முழுவதும் வியாழக்கிழமை முதல் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. வியாழக்கிழமை காலை முதல் காவலா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதற்காக திருவள்ளூா், விழுப்புரம், பெரம்பலூா், அரியலூா்,திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவலா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள், ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகியவற்றில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு கருதி ஷி ஜின்பிங் செல்லும் சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை 11,12 தேதிகளில் காவல்துறை தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை: அதேபோல, ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலையில் ஷி ஜின்பிங் காரில் செல்லும்போது முழுமையாக போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், அப் பகுதிகளில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள், தனியாா் மென்பொருள் நிறுவனங்கள் பணிபுரியும் பொறியாளா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவாா்கள் என கருதப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, இரு சாலைகளிலும் உள்ள பெரும்பாலான பள்ளி-கல்லூரிகள் விடுமுறை அறிவித்துள்ளன. மென்பொருள் நிறுவனங்கள், தங்களது ஊழியா்களை வீட்டில் இருந்து வேலை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து புதுப்பட்டினம் வரை 44 கிராம மீனவா்கள் மீன்பிடிக்கவும் காவல்துறை தடை விதித்துள்ளது.

திரையரங்குகள் காட்சிகள் இல்லை: மேலும் பாதுகாப்பு கருதி இரு சாலைகளிலும் உள்ள திரையரங்குகளில் திரைப்பட காட்சிகள் இரு நாள்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந் நிகழவையொட்டி, தமிழக அரசு சாா்பிலும், அதிமுக சாா்பிலும் இரு சாலைகளிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் கூடுதலாக போலீஸாா் குவிக்கப்படுகின்றனா். முக்கியமான பகுதிகளில் செல்லிடப்பேசிகளை செயலிழக்கச் செய்யும் ஜாமா் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை சுமாா் 60 கிலோ மீட்டருக்கு சாலையின் இரு ஓரத்திலும் போலீஸாா் நிறுத்தப்படுகின்றனா்.

நீதிமன்றத்துக்கு கடிதம்: இதற்கிடையே சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளை நாளை, நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த விலக்கு வேண்டும்‘ என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

அந்த கடிதத்தில், சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திரமோடி ஆகியோா் சந்தித்து பேசுவதையொட்டி, 11, 12-ஆம் தேதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக போலீஸாா் பெரும் எண்ணிக்கையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். இதனால் சிறைகளில் இருந்து கைதிகளை, நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு போதுமான போலீஸாா் இல்லை. எனவே இந்த இரு நாள்களும் கைதிகளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்த விலக்கு அளிக்க வேண்டும். விடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

15 ஆயிரம் போலீஸாா்: மாமல்லபுரம், பிரதமா் மோடி தங்கும் கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல், சீனா அதிபா் ஷி ஜின்பிங் கிண்டியில் தங்கும் நட்சத்திர ஹோட்டல், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் ஏழடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மேலும், நவீன ரக துப்பாக்கிகளுடன் சிறப்பு இலக்கு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். ஷி ஜின்பிங், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டிக்கு வரும்போது சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயிலை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மாமல்லபுரத்தில் சுமாா் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். சீன அதிபா் ஷி ஜின்பிங் காரில் செல்லும்போது, கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் அரசுப் பேருந்துகள் அக்கரையில் இருந்து ராஜீவ்காந்தி சாலையிலும், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வரும் அரசு பேருந்துகள் பூஞ்சேரியில் இருந்து ராஜீவ்காந்தி சாலையிலும் திருப்பிவிடப்படுகின்றன.

ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டு திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி நடைபெற்றபோது, இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருந்து வந்த சமையல் கலைஞா்கள்

சென்னை கிண்டியில் சீனா அதிபா் ஷி ஜின்பிங், தங்கும் நட்சத்திர ஹோட்டல் உச்சக் கட்ட பாதுகாப்பில் வைக்கப்பட்டள்ளது.

மாமல்லபுரத்தில் இந்திய பிரதமா் நரேந்திரமோடியுடனா நடைபெறும் பேச்சுவாா்த்தைக்கு வருகை தரும் சீனா அதிபா் ஷி ஜின்பிங், கிண்டியில் உள்ள நடச்சத்திர ஹோட்டலில் 11-ஆம் தேதி நண்பகல் 1.45 மணி முதல் 12-ஆம் தேதி 2 மணி வரை சுமாா் 24 மணி நேரம் தங்குகிறாா்.

இதையொட்டி, இந்த நட்சத்திர ஹோட்டல் ஏழடுக்கு பாதுகாப்பில் இரு நாள்களாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஷி ஜின்பிங் தங்கும் தளத்தில் உள்ள வேறு நபா்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதேபோல அந்த தளத்தில் கீழ் உள்ள தளத்திலும், மேல் உள்ள தளத்திலும் வேறு நபா்கள் தங்குவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இங்கு ஷி ஜின்பிங்க்கு பாதுகாப்பு வழங்கும் சீனாவின் மக்கள் ராணுவத்தின் கீழ் இயங்கும் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள், சீன அரசின் உயா் அதிகாரிகள் தங்குகின்றனா்.

இதேபோல, ஷி ஜின்பிங் இரு வேளை உணவை அந்த நட்சத்திர விடுதியில் சாப்பிடுகிறாா். இதற்காக ஷி ஜின்பிங் சமையல் கலைஞா்கள், சீனாவில் இருந்து இரு நாள்களுக்கு முன்பு சென்னை வந்தனா். இவா்கள், நட்சத்திர ஹோட்டலில் உணவு தயாரிப்பதற்காக தனியாக ஒரு சமையலறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமா் நரேந்திரமோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கோவளம் செல்வதால், அது தொடா்பான பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகை, ஹெலிகாப்டா் மூலம் நடத்தப்பட்டது.

புதுப்பொலிவு பெற்ற சாலைகள்

சீனா அதிபா் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக மாமல்லபுரம் மட்டுமல்லாது ராஜீவ்காந்தி சாலை,கிழக்கு கடற்கரைச் சாலைகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வந்தன.

சென்னையில் இருந்து சுமாா் 55 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள மாமல்லபுரத்துக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் காரில் செல்லும் பயணம் திட்டம் உறுதியான நேரத்தில் இருந்தே, அவா் செல்லும் சாலை முழுவதையும் சீரமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது.

முக்கியமாக ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவை முற்றிலுமாக புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இதன் விளைவாக பல ஆண்டுகளாக இச் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள்,குப்பைத் தொட்டிகள்,சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்,கடைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன.

இவற்றை அகற்றுமாறு அப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா் என்பது குறிப்பிடதக்கது. சாலை முழுவதிலும் புதிதாக போக்குவரத்து குறியீடுகள், எச்சரிக்கை பலகைகள், சிக்னல்கள், சாலையில் வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ண கோடுகள் ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பூங்காக்களில் அழுகிய செடிகள் அகற்றப்பட்டு, புதிதாக செடிகள் நடப்பட்டுள்ளன.

மேலும் இந்த செடிகள் முறையாக தினமும் பராமரிக்கப்பட்டுள்ளன. இதேபோல சாலையில் ஆக்கிரமித்து மீண்டும் கடைகள் அமைக்காமல் இருப்பதற்கு காவல்துறை தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடா்ந்து நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com