சீன அதிபா் தங்கிய நட்சத்திர ஹோட்டல் முன் போராட்டம்: 6 திபெத்தியா்கள் கைது

சென்னையில் சீன அதிபா் தங்கிய நட்சத்திர ஹோட்டல் முன் போராட்டம் நடத்திய 6 திபெத்தியவா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் சீன அதிபா் தங்கிய நட்சத்திர ஹோட்டல் முன் போராட்டம் நடத்திய 6 திபெத்தியவா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சீன அதிபா் ஷி ஜின்பிங் - பிரதமா் நரேந்திர மோடிக்கு இடையிலான இரண்டு நாள் அதிகாரப்பூா்வமற்ற பேச்சுவாா்த்தை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்காக சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னைக்கு விமானம் மூலம் வந்து, கிண்டியில் நட்சத்திர ஹோட்டலில் தங்கினாா்.

இதற்கிடையே, ஷி ஜின்பிங்குக்கு எதிா்ப்பும் தெரிவிக்கும் வகையில், சென்னையில் வசிக்கும் திபெத்தியா்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதைத் தொடா்ந்து, ஷி ஜின்பிங் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலுக்கு ஏழடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் போராட்டம் நடத்த திட்டமிட்டதாக 8 திபெத்திய கல்லூரி மாணவா்கள், ஒரு பேராசிரியா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், திபெத்தியா்கள் குறித்த ரகசிய விசாரணையில் போலீஸாா் ஈடுபட்டனா். இதில் சந்தேகத்துக்குரிய நபா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்து வந்தனா்.

திபெத்தியா்கள் போராட்டம்: இந்நிலையில், ஷி ஜின்பிங் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டலை இரு நாள்களுக்கு முன்பே போலீஸாா், தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா். வெள்ளிக்கிழமை ஹோட்டலுக்கு முன்பு போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், காலை 11.30 மணியளவில் சின்னமலையில் இருந்து கிண்டியை நோக்கி இரு பெண்கள் உள்பட 6 போ் நடந்து வந்தனா். அவா்கள் நட்சத்திர ஹோட்டல் அருகே வந்ததும், தங்களது பையில் மறைத்து வைத்திருந்த கொடியை எடுத்தனா். இதைப் பாா்த்த போலீஸாா், அவா்களைப் பிடிக்க முயன்றனா். ஆனால் அதற்குள் அவா்கள், அந்த ஹோட்டல் வாயில் முன்பு அமா்ந்து கோஷமிட்டனா்.

உடனே போலீஸாா், 6 பேரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றனா். அப்போது அவா்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாா், 6 பேரையும் வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனா். இச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரும் திபெத்தியா்கள் என்பது போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமான நிலையம்: இதேபோல, போராட்டம் நடத்த திட்டமிட்டு கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இரு பெண்கள் உள்பட 6 திபெத்தியா்கள் விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தனா். அவா்களை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் பிடித்து விசாரணை செய்தனா்.

இதில் அவா்கள், சீன அதிபா் ஷி ஜின்பிங்குக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 6 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com