டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.5 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.5 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

தமிழக சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சாா்பில் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான நடமாடும் மருத்துவ வாகனங்களும், கொசு புகை அடிக்கும் வாகனங்களும் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

அதைத் தவிர, நடமாடும் நிலவேம்பு குடிநீா் விநியோக வாகனம் உள்பட மொத்தம் 160 வாகனங்கள் வாயிலாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.

அந்த வாகனங்களின் செயல்பாட்டை சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் சி.விஜயபாஸ்கா் கூறியதாவது:

பருவ கால மாற்றத்தின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை டெங்கு காய்ச்சல் தாக்கம் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் மிகக் குறைவாகவே டெங்கு பாதிப்பு இருக்கிறது.

இருந்தபோதிலும், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் தலையாய நோக்கமாகும். அதைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே, சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு அனைத்து இடங்களிலும் நிலவேம்பு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடசென்னை பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.

நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4 கோடி, நிலவேம்பு குடிநீருக்கு ரூ.1 கோடி என மொத்தம் ரூ. 5 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com