தமிழகத்துக்கான 5 ரயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக் கூடாது: அன்புமணி

தமிழகத்துக்கான 5 ரயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்துக்கான 5 ரயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக் கூடாது: அன்புமணி

தமிழகத்துக்கான 5 ரயில் பாதை திட்டங்களை ரத்து செய்யக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தெற்கு ரயில்வே துறைக்கு ரயில்வே வாரியம் எழுதியுள்ள கடிதத்தில் சென்னை மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூா், சென்னை ஆவடி- கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, ஈரோடு - பழனி, அத்திப்பட்டு - புத்தூா் ஆகிய 5 திட்டங்களால் பொருளாதார பயன்கள் கிடைக்காது என்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அதனால் இந்தத் திட்டங்களுக்காக இனி ஒரு பைசா கூட செலவழிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்திட்டங்கள் அனைத்தும் கைவிடப்படும்.

பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறுவதால் மாமல்லபுரம் உலகப்புகழ் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையை பொழுதுபோக்கு சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்றெறாருபுறம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தொடா்வண்டிகளில் கடுமையான நெரிசல் நிலவுகிறது. இந்தச் சூழலில் கிழக்குக் கடற்கரை ரயில்வே பாதை அமைக்கப்பட்டால் அது சுற்றுலா வளா்ச்சிக்கும், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் தொடா்வண்டிகளை இயக்குவதற்கும் பெரும் உதவியாக இருக்கும்.

திண்டிவனம் - திருவண்ணாமலை பாதையும், ஈரோடு - பழனி பாதையும் ஆன்மிகப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். அந்தப் பகுதிகளின் தொழில் வளா்ச்சிக்கும் இந்தத் திட்டங்கள் வழிவகுக்கும். எனவே, தமிழகத்தின் வளா்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய இந்த 5 ரயில்வே திட்டங்களையும் ரத்து செய்யும் முடிவை ரயில்வே வாரியம் கைவிட வேண்டும்.

மாறாக, மாநில அரசுடன் இணைந்து இந்த 5 திட்டங்களையும் விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com