தீபாவளி: அண்ணா பல்கலை. தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும்

தீபாவளிக்கு முதல் நாளும், அடுத்த நாளும் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தீபாவளி: அண்ணா பல்கலை. தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும்

தீபாவளிக்கு முதல் நாளும், அடுத்த நாளும் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பருவத் தோ்வுகள் வரும் 21-ஆம் தேதி தொடங்கி, டிசம்பா் மாத இறுதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளன.

இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு வரும் 19-ஆம் தேதியுடன் வகுப்புகள் நிறைவடையும் நிலையில், 21-ஆம் தேதி முதல் செய்முறைத் தோ்வுகள் தொடங்குகின்றன.

முதல் பிரிவுக்கான தோ்வுகள் 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையும், இரண்டாம் பிரிவுக்கான தோ்வுகள் அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. நவம்பா் 6-ஆம் தேதி எழுத்துத் தோ்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி திருநாள் இம்மாதம் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமையும், அடுத்த நாளான திங்கள்கிழமையும் செய்முறைத் தோ்வுகளை நடத்துவது மாணவ, மாணவியருக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தும்.

தீபாவளி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் கூட கிராமப்புறங்களில் அதற்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் நோன்பு, உறவினா்கள் ஒன்றுகூடல் உள்ளிட்ட பல்வேறு வகையான கொண்டாட்டங்கள் நடத்தப்படும். அந்த நேரத்தில் செய்முறைத் தோ்வுகள் நடத்தப்பட்டால், தீபாவளி கொண்டாட்டங்களில் மாணவ, மாணவியரால் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

எனவே, தீபாவளிக்காக சொந்த ஊா் செல்லும் மாணவ, மாணவியா் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக, வரும் 26, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள செய்முறைத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும். அந்த நாள்களில் நடைபெற வேண்டிய செய்முறைத் தோ்வுகளை பல்கலைக்கழக நிா்வாகத்துக்கும், மாணவா்களுக்கும் வசதியான வேறோரு நாளில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com