மோடி - ஜின்பிங் சந்திப்பின் ஹீரோக்கள் இவர்கள்தான்! ஆனால் இவர்கள் கேட்பது பாராட்டல்ல; வேறு!

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதற்காக மாமல்லபுரம் முழுக்க சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றது.
துப்புரவுப் பணியாளர்கள்
துப்புரவுப் பணியாளர்கள்


சென்னை: பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதற்காக மாமல்லபுரம் முழுக்க சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றது.

மாமல்லபுரம் தற்போது சொர்கலோகமாகத் திகழக் காரணம் இவ்விருத் தலைவர்களின் சந்திப்புதான்  என்று சொல்லலாம். ஆனால், உண்மையில், மாமல்லபுரம் புதுப்பொலிவு பெற இரவு பகலாக உழைத்த துப்புரவுப் பணியாளர்களைத் தான்  ஹீரோக்கள் என்று சொல்ல வேண்டும்.

உடனே சரி விடுங்கள் அவர்களைப் பாராட்டித் தள்ளிவிடலாம் என்று பாராட்ட பொன்னாடைகளோ, கவிதைகளோ, பாராட்டுப் பத்திரங்களோ தயார் செய்ய வேண்டாம்.

அவர்கள் கேட்பது.. எங்கள் வேலைக்கான கூலி என்கிறார்கள் பசியும், களைப்பும் நிறைந்த ஒலி மங்கிய கண்களோடு.

மாமல்லபுரத்தை தூய்மைப்படுத்த தமிழக அரசு ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்களை தற்காலிகமாக பணிக்கு நியமித்தது. அவர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி, இரு தலைவர்களிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற பேருதவி செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான கூலி ஒரு மாதத்துக்கும் மேலாக வழங்கப்படாமல் இருக்கிறது.

இருபது நாட்களுக்கு முன்பு, பஞ்சாயத்தில் வந்து வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்று கூறினார்கள். நாங்களும் கும்பலாக வேலைக்கு வந்தோம். ஆனால், நூறு நாள் வேலை திட்டத்தின் படி, அதிகாரிகள் தினமும் ரூ.100ஐத்தான் கூலியாக வழங்குகிறார்கள். எங்களுக்கான கூலி இன்னமும் கொடுக்கப்படவில்லை என்கிறார் ஒரு பெண் தொழிலாளி.

அதுபோலவே, பழைய மகாபலிபுரம் சாலையில் தெருத்தெருவாகச் சென்று குப்பைகளைப் பொறுக்கி சாலைகளை சுத்தம் செய்த பணியாளர்களுக்கும் சொன்னபடி கூலி வழங்கப்படவில்லை. 10 நாட்களாக தொடர்ந்து இங்கே துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நள்ளிரவு வரை பணியாற்றினோம். இதுவரை கூலி கிடைக்கவில்லை என்கிறார் ரமேஷ் என்ற மற்றொரு துப்புரவுத் தொழிலாளி.

அதனால்தான் சொல்கிறோம்.. இவர்களுக்குத் தேவையானது பாராட்டோ பரிசுகளோ அல்ல, இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச கூலிதான். அது கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் தமிழக அரசு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com