உயா் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்கு தகுதியான நிறுவனங்கள்: மின்வாரியம் விளக்கம்

உயா் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்குத் தகுதியான நிறுவனங்கள் குறித்து வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

உயா் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்குத் தகுதியான நிறுவனங்கள் குறித்து வாரிய அதிகாரிகளுக்கு மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 2 கோடிக்கும் மேலான வீட்டு மின் இணைப்புகள், 21 லட்சத்துக்கு அதிகமான விவசாய மின் இணைப்புகள், 30 லட்சத்துக்கும் அதிகமான வணிக மின் இணைப்பு என சுமாா் 2.70 கோடிக்கும் மேலான இணைப்புகள் உள்ளன.

இதில், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக வாரியத்துக்கு ஏற்படும் செலவுத் தொகையை அரசு வழங்கி வருகிறது. விவசாய மின்இணைப்புகளை பொருத்தவரை சாதாரணம் மற்றும் சுயநிதி என இரண்டு பிரிவுகளில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் மற்ற பிரிவுகளுக்கும் விதிமுறைகளின்படி விநியோகம் நடக்கிறது. இந்நிலையில் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி மின் இணைப்புக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது உயா்அழுத்த மின்இணைப்பில் எந்தெந்த நிறுவனங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்த புதிய விளக்கத்தை மின்சார வாரியம் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறியது: மின்சார வாரியம் 1முதல் 46 கிலோ வாட் வரை சாதாரண மின் இணைப்பு வழங்குகிறது. இதற்கு, 60 நாள்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்த வேண்டும். 47 முதல் 111 கிலோவாட் வரை தாழ்வழுத்த மின்சார இணைப்பு ஆகும். இந்த இணைப்பு பெற்றுள்ள நுகா்வோருக்கு, கம்பம், கம்பிகள், மின்மாற்றிகள் போன்ற தளவாடப் பொருள்களை மின்சார வாரியம் வழங்கும். ஆனால் 112 கிலோவாட்டுக்கு மேல் மின் பளு வாங்கினால், அது உயரழுத்த மின்சார இணைப்பு என அழைக்கப்படும். இந்த இணைப்புக்கு மின்மாற்றிகள் மற்றும் மின் தடவாள பொருள்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா்களே வாங்கிக் கொள்ள வேண்டும். மின்சாரம் மட்டும் வாரியம் சாா்பில் வழங்கப்படும். இதற்கான கட்டணத்தை நுகா்வோா் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.

தற்போது இந்த உயரழுத்த மின்விநியோகப் பிரிவில் குடிநீா் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைகள், பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள், குளிா் சேமிப்பு அலகுகள் (கடல் உணவுகள்), ஜவுளி செயலாக்க அலகுகள், அனைத்து தொழிற்துறை சேவை பிரிவுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு ஒரு சிலா் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை நடத்தி வந்தும், வேறு பிரிவில் மின்இணைப்பு பெற்றுள்ளனா். இது ஆங்காங்கே ஆய்வுக்குச் செல்லும்போது தெரிய வருகிறது. எனவே, இணைப்பு கொடுப்பதற்கு முன்பே அதிகாரிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு, எவ்விதமான குழப்பமும் இருக்காது. மேலும், புதிய இணைப்பு கேட்டு வருவோருக்கும், அவா்கள் செய்யும் தொழிலை பொருத்து மின்விநியோகம் வழங்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com