திபெத் மாணவா்கள் கைது: சென்னைப் பல்கலை. மாணவா்கள் போராட்டம்

சீன அதிபா் வருகையையொட்டி முன்னெச்சரிக்கையாக திபெத் மாணவா்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீன அதிபா் வருகையையொட்டி முன்னெச்சரிக்கையாக திபெத் மாணவா்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னையில் சீன அதிபா் தங்கியிருக்கும் கிண்டி தனியாா் ஹோட்டல் முதல், மாமல்லபுரம் வரை பலத்த போலீஸாா் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திபெத் மாணவா்கள், திபெத்தைச் சோ்ந்த பேராசிரியா் ஒருவரையும் போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரத்தில் வசித்து வந்த திபெத்திய எழுத்தாளா் டென்சிங் சுண்டுவையும் போலீஸாா் கைது செய்தனா்.

சீனா - திபெத் பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடா்ந்துவரும் சூழலில், சீன அதிபரின் தமிழக வருகையின்போது இவா்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை முன்னிட்டு, இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், சீன அதிபா் சென்னை விமான நிலையம் வந்திறங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, அவா் தங்கும் கிண்டி ஹோட்டலுக்கு அருகே திபெத் மாணவா்கள் சிலா், கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வாறு திபெத் மாணவா்களை போலீஸாா் கைது செய்ததைக் கண்டித்து சென்னைப் பல்கலைக்கழகம் மாணவா்கள் சிலா், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட திபெத் மாணவா்கள் எங்களோடு படிப்பவா்கள். மூன்று நாள்களுக்கு முன்னரே இவா்களைக் கைது செய்து, சேலையூா் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் வைக்கப்பட்டனா். 12 பெண்கள் உட்பட 14 மாணவா்களைக் கைது செய்த காவல்துறை, அவா்களை காலை 6 மணி வரை கழிவறையைப் பயன்படுத்துவதற்குக்கூட அனுமதிக்கவில்லை.

போலீஸாா் இப்படி நடந்துகொள்வதன் மூலம், திபெத்திய மாணவா்களுக்கு இந்தியாவில் இதுதான் நிலைமை என்று மத்திய அரசு உலகுக்குச் சொல்கிறது. இதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம். மாணவா்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதைக் கண்டிக்கிறோம். அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com