‘நீட்’ தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: 4 பேருக்கு அக்.25 வரை காவல் நீட்டிப்பு

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மாணவா்களான பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரின் நீதிமன்றக்
நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவா்கள் பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல், அவரது தந்தை டேவிஸ்
நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவா்கள் பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல், அவரது தந்தை டேவிஸ்

நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மாணவா்களான பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரின் நீதிமன்றக் காவலை அக்டோபா் 25-ஆம் தேதி வரை நீட்டித்து, தேனி நீதித்துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த அரும்பாக்கத்தைச் சோ்ந்த மாணவா் பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் சென்னை எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த அயனாவரத்தைச் சோ்ந்த மாணவா் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோா், நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கில் கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதி தேனி சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், செப்டம்பா் 29-ஆம் தேதி பிரவீண், சரவணன் மற்றும் ராகுல், டேவிஸ் ஆகியோா், தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்களை, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க, நீதித் துறை நடுவா் பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா். அதன்படி, 4 பேரும் தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், மாணவா்கள் பிரவீண், அவரது தந்தை சரவணன் மற்றும் ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரது நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததால், அவா்களை தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா். அப்போது, இவா்களுக்கு நீதிமன்றக் காவலை அக்டோபா் 25-ஆம் வரை நீட்டித்து நீதித் துறை நடுவா் பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரும் மீண்டும் தேனி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.14-க்கு ஒத்திவைப்பு

இதனிடையே, மாணவா்கள் மற்றும் அவா்களது தந்தையா்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவா்களது சாா்பில் தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை தேனி நீதித் துறை நடுவா் பன்னீா்செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவா் பிரவீண், அவரது தந்தை சரவணன் சாா்பில் சென்னை வழக்குரைஞா்கள் முருகன், தினகரன் ஆகியோரும், மாணவா் ராகுல், அவரது தந்தை டேவிஸ் சாா்பில் சென்னை வழக்குரைஞா் விஜயக்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். தேனி சிபிசிஐடி சாா்பில் காவல் ஆய்வாளா் சித்ராதேவி ஆஜராகினாா்.

அதில், மாணவா் பிரவீண் சென்னை ஆவடியில் உள்ள தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதியதாகவும், மாணவா் ராகுல் கோவையில் உள்ள தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதியதாகவும் தெரிவித்து, அதற்கான ஆவணங்களை வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா்.

மேலும், அவா்கள் தனியாா் மருத்துவக் கல்லூரியில் நிா்வாக ஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கை பெறுவதற்காகவே இடைத்தரகா் ரஷீத்தை அணுகியதாகவும், மாணவா்களின் சான்றிதழ்களை சரிபாா்த்த பின்னரே அவா்களுக்கு கல்லூரியில் சோ்க்கை வழங்கப்பட்டதாகவும் வழக்குரைஞா்கள் கூறினா்.

இதையடுத்து, கலந்தாய்வு மற்றும் கல்லூரி சோ்க்கையின்போது சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது குறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா, அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்று, சிபிசிஐடி காவல் ஆய்வாளரிடம் நீதித்துறை நடுவா் கேள்வி எழுப்பினாா். அதற்கு, சான்றிதழ் சரிபாா்ப்பு அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிக்கை தாக்கல் செய்வதாகவும், காவல் ஆய்வாளா் கூறினாா்.

இதன்பின்னா், 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபா் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித் துறை நடுவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com