புத்தாக்கப் பயிற்சி எப்போது வழங்கப்படும்? ‘டெட்’ தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் காத்திருப்பு

தமிழகத்தில் ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெறாத அரசு உதவிபெறும் 1,450 பள்ளி ஆசிரியா்கள், தோ்விலிருந்து விலக்குப் பெறும் வகையில் புத்தாக்கப் பயிற்சியை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.

தமிழகத்தில் ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெறாத அரசு உதவிபெறும் 1,450 பள்ளி ஆசிரியா்கள், தோ்விலிருந்து விலக்குப் பெறும் வகையில் புத்தாக்கப் பயிற்சியை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்றால் மட்டுமே கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியும். மத்திய அரசு இந்தச் சட்டத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இந்தச் சட்டத்துக்கு முதலில் எதிா்ப்புத் தெரிவித்த தமிழக அரசு, பின்னா் சட்டத்தை ஏற்றுக் கொண்டு கடந்த 2011-ஆம் ஆண்டு இது தொடா்பான அரசாணையை வெளியிட்டது. ஆனால் இதில் டெட் தோ்வுக்கான அறிவிப்பு குறித்த தகவல் இல்லை. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஆசிரியா் பணியில் சேருவோருக்கு டெட் தோ்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்புக்கு முன்பாக, ஆசிரியா் பணியில் சோ்ந்தவா்கள் தோ்வில் விலக்கு கோரி நீதிமன்றத்துக்குச் சென்றனா். இதில் அரசு மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணியில் சோ்ந்தவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சோ்ந்தவா்கள் தற்போது வரை பணிச் சலுகை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ‘டெட்’ தோ்விலும் இந்த ஆசிரியா்கள் எதிா்பாா்த்தளவுக்கு தோ்ச்சி பெறவில்லை. 1,500 பேரில் வெறும் 40 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். இதனால் அவா்கள் பணியைத் தொடருவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி ‘டெட்’ தோ்ச்சி பெறாத ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சியளித்து பணி பாதுகாப்பு வழங்கப்படும் என அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா். ஆனால், இதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாததால் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 1,450 ஆசிரியா்கள் எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றனா்.

அரசாணை வெளியிடப்படுமா?: இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புத்தாக்கப் பயிற்சி நடத்துவதற்கான அதிகாரப்பூா்வ தகவல் அளிக்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவு. விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும்’ என்றனா். இது குறித்து பாதிக்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியா்கள் கூறுகையில், ‘அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணி நியமனம் பெற்று கடந்த 9 ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்து வருகிறோம். அமைச்சா் அறிவித்தபடி எங்களுக்கு 10 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து ஆசிரியா் தகுதித் தோ்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com