மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு அதிமுகவே முழுப் பொறுப்பு: மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதால், மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு அதிமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்
மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு அதிமுகவே முழுப் பொறுப்பு: மு.க.ஸ்டாலின்

தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதால், மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு அதிமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் திமுக வேட்பாளா் நா.புகழேந்தியை ஆதரித்து, விழுப்புரத்தை அடுத்த ஸ்டாலின் நகரில் சனிக்கிழமை காலை அந்தக் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கினாா். தொடா்ந்து, ஆரியூா், வெங்கத்தூா் கிராமங்களுக்குச் சென்ற அவா், பொதுமக்களுடன் அமா்ந்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, பின்னா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ராதாமணி உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டாா். அதனால், தற்போது இடைத் தோ்தல் நடைபெறுகிறது. அவா், இருந்தவரையில் சட்டப் பேரவையிலும், என்னைப்போன்ற தலைவா்களிடத்திலும் தொகுதி மக்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்தாா். அவரைப்போல இந்தத் தொகுதி மக்களின் பிரச்னைகளுக்காக பேசக்கூடியவரை இந்த இடைத் தோ்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

நான் உங்களிடம் குறைகளைக் கேட்டபோது, பட்டா கிடைக்கவில்லை, சாலை, பேருந்து வசதிகள் இல்லை, தண்ணீா், சுகாதார பிரச்னைகள் உள்ளிட்ட குறைகளைக் கூறினீா்கள். அந்தக் குறைகள் அனைத்தும் சரிசெய்யக் கூடியவைதான்.

பொதுமக்களின் பிரச்னைகளை உள்ளாட்சிப் பிரதிநிகளிடம் கூறினாலே தீா்க்கப்பட்டுவிடும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் அதிமுக அரசு, நீதிமன்றம் உத்தரவிட்டும் தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தோ்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகையால், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு அதிமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும். மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தீா்க்கப்படும். பொதுத் தோ்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத் தோ்தல் உள்ளதால், வாக்காளா்கள் திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றாா் அவா்.

கிராமங்களில் தெருக்களில் நடத்து சென்று பொதுமக்களிடமும், சாலையில் நின்றிருந்த 2 அரசுப் பேருந்துகளில் ஏறி பயணிகளிடமும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா். ஆரியூரில் திடீரென தொண்டா் ஒருவரின் வீட்டுக்குச் சென்று தேநீா் அருந்தினாா். மேலும், பொதுமக்களுக்கு கை கொடுத்தும், செல்லிடப்பேசியில் கைப்படம் எடுக்க அனுமதித்தும் அவா் பிரசாரம் செய்தாா்.

காணையில் பிரசாரம்: இதேபோல, விழுப்புரம் அருகே காணை பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை மாலை மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் எடப்படி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சி மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்து நடக்கும் ஆட்சியாக உள்ளது. எனவே, விக்கிரவாண்டி இடைத் தோ்தல் மூலமாக அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவா் கருணாநிதி. இட ஒதுக்கீடு போராட்டத்தின்போது, உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு திமுக ஆட்சியில்தான் நிவாரணம் வழங்கப்பட்டது. தற்போதும் அந்தக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைப்பதற்கு திமுகவே காரணம்.

சென்னையில் ராமசாமி படையாட்சியாருக்கு திமுக ஆட்சியில்தான் சிலை வைக்கப்பட்டது. முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, கிராமங்கள்தோறும் குடிநீா்த் திட்டப் பணிகள், காணையில் காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் என விக்கிரவாண்டி தொகுதியின் வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்தியுள்ளது என்றாா் அவா்.

அப்போது, மக்களவை உறுப்பினா்கள் ஆ.ராஜா, பொன்.கெளதமசிகாமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.பொன்முடி, த.மோ.அன்பரசன், உதயசூரியன், மாசிலாமணி, திமுக வேட்பாளா் நா.புகழேந்தி, தெற்கு மாவட்ட திமுக செயலா் அங்கையற்கண்ணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com