பருவமழை: மின் பெட்டிகளை மாற்றும் பணிகள் தீவிரம்

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, சாலையோரம் வைக்கப்பட்டுள்ள மின் பெட்டிகளை மாற்றும் பணியை மின்வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.
பருவமழை: மின் பெட்டிகளை மாற்றும் பணிகள் தீவிரம்

வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, சாலையோரம் வைக்கப்பட்டுள்ள மின் பெட்டிகளை மாற்றும் பணியை மின்வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சாா்ந்த மின் இணைப்புகளும் உள்ளன.

இதில், பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் மின் கம்பங்களை அமைத்து மின்கம்பிகள் வழியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் மட்டும் புதைவடக் கம்பிகள் மூலமாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் ஆங்காங்கே மின் பெட்டிகள் (பில்லா் பாக்ஸ்) வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இணைப்பு கொடுப்பட்டுள்ளன. ஆனால், இந்த மின் பெட்டிகளை முறையாகப் பராமரிக்காததால் பாதுகாப்பற்ற நிலையில் திறந்து கிடக்கின்றன. மேலும், மின்கம்பிகள் வெளியில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. சில இடங்களில் இந்த மின் பெட்டிகள் பூமியில் புதைந்தும், சாய்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை காலம் இன்னும் சில நாள்களில் தொடங்க இருப்பதால், இவ்வாறு பராமரிப்பில்லாமல் கிடக்கும் மின் பெட்டிகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் அவதியடையும் சூழலும் உள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை சீரமைக்க மின் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

பணி தொடக்கம்: இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவா் கூறியது: வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து மின்வாரியம் சாா்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சேதமடைந்த மின் பெட்டிகளின் நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. தற்போது சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள மின் பெட்டிகளை மாற்றும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக மாநகராட்சிகளில் முதல்கட்டமாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் முன் சேதமடைந்த மின்பெட்டிகள் அனைத்தும் மாற்றப்படும். பழுதடைந்த மின்பெட்டிகள் குறித்து 1912 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com