சோதனை முறையில் ‘ப்ரீபெய்டு மீட்டா்’ பொருத்தும் பணிகள் தீவிரம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் "ப்ரீபெய்டு மின் மீட்டர்' பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் "ப்ரீபெய்டு மின் மீட்டர்' பொருத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின் இணைப்புகளும், 21 லட்சத்துக்கும் அதிகமான விவசாய மின் இணைப்புகளும், 30 லட்சத்துக்கும் அதிகமான வணிகம் சார்ந்த மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், பல மின் பயனீட்டாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணத்தை மின் வாரியத்திற்கு முறையாகச் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் மின் வாரியத்துக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அதேபோல், பலர் மின் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது தெருவோரங்களில் மின்விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டிகளில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுத்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு மின்சாரம் எடுப்பதும், மீட்டரை ஓடவிடாமல் காந்தம் போன்ற பொருளை வைப்பது என பல்வேறு வகைகளில் மின் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் வாரியத்துக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், "ப்ரீபெய்டு மீட்டர்' பொருத்த மின்வாரியம் திட்டமிட்டது. இதன் மூலமாக மின் பயனீட்டாளர்கள், மொபைல் போனுக்கு "ரீசார்ஜ்' செய்வது போல், மின் கட்டணத்தையும் மாதம்தோறும் மின் வாரியத்திடம் முதலில் பணம் செலுத்தி "ரீசார்ஜ்' செய்துகொள்ள வேண்டும்.
 அதன் பிறகு, அவர்கள் "ரீசார்ஜ்' செய்த தொகைக்கு தகுந்த மின்சாரம் வழங்கப்படும். இதேபோல் மின் பயனீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும், முதலில் "ரீசார்ஜ்' செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே மின்சாரத்தை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இல்லாவிட்டால், மின்சார விநியோகம் நிறுத்தப்படும். மேலும் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்தாலும் அது கண்டுபிடிக்கப்படும். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை அடிப்டையில் "ப்ரீபெய்டு மீட்டர்' பொருத்தப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் வகையில் "ப்ரீபெய்டு மீட்டர்' பொருத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம். டெண்டர் எடுக்க நிறுவனங்கள் சற்று தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தற்போது சென்னையில் தியாகராய நகர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் சோதனை அடிப்படையில் இந்த வகை மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், வாரியத்துக்கு மட்டும் நன்மை இல்லாமல், நுகர்வோருக்கும் நன்மை கிடைக்கும். அதாவது குறிப்பிட்ட நேரத்தில் மின் கணக்கீட்டாளர், கணக்கு எடுக்காததால் ஏற்படும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com