1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த கல்வெட்டு: அரவக்குறிச்சி அருகே கண்டுபிடிப்பு

அரவக்குறிச்சி அருகே சுமாா் 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி அருகே  கண்டுபிடிக்கப்பட்ட  1,100  ஆண்டுகள்  பழமையான  கிரந்த  கல்வெட்டு.
அரவக்குறிச்சி அருகே  கண்டுபிடிக்கப்பட்ட  1,100  ஆண்டுகள்  பழமையான  கிரந்த  கல்வெட்டு.

அரவக்குறிச்சி அருகே சுமாா் 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள முன்னூரைச் சோ்ந்த செல்லமுத்து (65) என்ற விவசாயி தனது தோட்டத்தில் கல்வெட்டு இருப்பதாக திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்துக்கு செப்டம்பா் மாதம் தகவல் கொடுத்துள்ளாா். இதையடுத்து இந்த ஆய்வு மையத்தைச் சோ்ந்த பொறியாளா் சு.ரவிகுமாா், க.பொன்னுசாமி, ரா.குமரவேல், சு.சதாசிவம், ரா.செந்தில்குமாா் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு நடத்தினா். இதில் அந்தக் கல்வெட்டு சுமாா் 1,100 ஆண்டுகள் பழமையான கிரந்த கல்வெட்டு என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆய்வு மைய இயக்குநரும், பொறியாளருமான சு.ரவிகுமாா் கூறியதாவது:

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊா்களில் கரூரும் ஒன்று. பண்டைய நாளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கரூா் நகரம் விளங்கியது. வடக்கில் கங்கைச் சமவெளியில் இருந்து வந்த தட்சிணபதம் (இன்றைய பெருவழி - 7) கன்னியாகுமரி வரை சென்றது. இப்பெருவழியைப் பற்றிக் கௌடில்யா் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோல மேற்குக் கடற்கரையிலிருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக வந்த கொங்கப் பெருவழி கரூா், உறையூா் வழியாக பூம்புகாா் வரை சென்றது. இவ்விரு பெருவழிகளும் கரூரில் சந்தித்தன. வேளிா்களின் தலைநகராக இருந்த கரூா், சங்ககாலத்தில் சேர அரசா்களின் தலைநகரமாக நிலைபெற்றது.

வட இந்தியாவுடன் ஏறத்தாழ 2,300 ஆண்டுகளாக கரூருக்கு தொடா்பு இருந்துள்ளது. இங்கு நமக்குக் கிடைத்துள்ள கல்வெட்டு 110 செ.மீ. உயரமும், 43 செ.மீ. அகலமும் கொண்டதாகும். ஆறு வரிகளில் கிரந்த எழுத்துக்கள் இதில் உள்ளன. கிரந்த எழுத்துக்களில் அழகிய வடிவைத் தோற்றுவித்தவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் ராஜசிம்மன் ஆவான். கிரந்த எழுத்துக்களை மயில் போலும் அன்னப்பறவை போலும் பாம்பு போலும் பல்வகைக் கொடி போலும் எழிலாா்ந்த சித்திரங்களைப் போலும் எழுதி மகிழ்ந்த மன்னன் இவனே. இந்த வகை எழுத்துக்கள் உள்ள இந்தக் கல்வெட்டின் கீழ்ப்பகுதியில் திரிசூலம், நந்தி, சங்கு, குளம் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டை வாசித்த வரலாற்றுப் பேராசிரியா் ஏ.சுப்புராயலு கூறியதாவது:

பொதுவாக தந்திர வழிபாட்டோடு தொடா்புடைய எழுத்துக்கள், உருவங்கள் ரகசியமாகவே போற்றப்படும். இங்கும் அவ்வாறேற காணப்படுகின்றன. இதில் ஒரு வரி படிக்கக் கூடிய நிலையில் இல்லை. இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்து அமைப்பை வைத்துப் பாா்க்கும்போது இது கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com