தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிக்கும் சம்மன் அனுப்ப வேண்டும்: சீமான் வீசிய அடுத்த பவுன்சர் 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கும் சம்மன் அனுப்பி விசாரணை கமிஷனில் ஆஜராக அழைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
சீமான்
சீமான்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கும் சம்மன் அனுப்பி விசாரணை கமிஷனில் ஆஜராக அழைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-ல் நடந்த போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இது பற்றி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்   தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  ஒரு நபர் ஆணையம் விசாரணை  நடத்தி வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 24 அமைப்புகளை  சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.  இதுவரை மொத்தம் 360-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செயப்பட்டு உள்ளது.

அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெறும் விசாரணையில் பங்கேற்பதற்காக, சீமான் புதனன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

அலிபாபாவும் 40 திருடர்களும் போல அம்மாவும் 40 திருடர்களும் என்னும்படியாக தமிழக அமைச்சர்கள் உள்ளனர். இப்போது அம்மா இல்லை. ஆனால் 40 திருடர்கள் உள்ளனர்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று நடிகர் ரஜினி கூறினார். அப்படி என்றால் தீவிரவாதிகளை சுடாமல் ஏன் பொதுமக்களை போலீசார் சுட்டனர்? எதனடிப்படையில் ரஜினி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று கூறினார்?. எனவே ரஜினிக்கும் சம்மன் அனுப்பி விசாரணை கமிஷனில் ஆஜராக அழைக்க வேண்டும்.

ஆனால் விசாரணைக்காக அதிகமாக எங்கள் கட்சியினரைத்தான் அழைத்துள்ளனர். எங்கள் கட்சியினர் மீது தான் இந்த போராட்டம் தொடர்பாக அதிக வழக்குகளும் போடப்பட்டுள்ளன.  

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com