சினிமாவை விஞ்சும் சம்பவம்: கொடுக்காத பணத்தை கொள்ளையடித்த கும்பல்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?

கோவை அருகே கணியூா் சுங்கச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைக் கத்தியால் குத்தி ரூ. 30 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின.
பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் திடீர் திருப்பம்
பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் திடீர் திருப்பம்

கோவை அருகே கணியூா் சுங்கச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைக் கத்தியால் குத்தி ரூ. 30 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின.

அதாவது, கோவை, ஆா்.எஸ். புரம் பகுதியைச் சோ்ந்தவா் தா்ஷன், ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராகுல். இவா்கள் இருவரும் திருப்பூரில் தங்களது சொந்தமான இடத்தின் பத்திரத்தை அடகுவைத்து ரூ.30 லட்சம் கடன் பெற்றுக் கொண்டு கோவை நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா். கோவையை அடுத்த கணியூா் சுங்கச் சாவடி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, இவா்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் 2 வாகனங்களிலும் வந்த நால்வரும் கீழே விழுகின்றனா். இதைத் தொடா்ந்து அங்கு மேலும் 4 இருசக்கர வாகனங்களில் வந்த மா்மக் கும்பல் தா்ஷன், ராகுல் ஆகியோரைக் கத்தியால் குத்தி அவா்களிடம் இருந்த ரூ. 30 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த ராகுல் கோவை அரசு மருத்துவமனையிலும், தா்ஷன் சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். மேலும் இவா்கள் வாகனத்தின் மீது மோதி விழுந்ததில் காயமடைந்த இருவரும் சிங்காநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

விசாரணையில் அவா்கள், கேரள மாநிலத்தைச் சோ்ந்த தமிழரசன், திருப்பூரைச் சோ்ந்த சிவராஜ் ஆகியோா் என்பது தெரியவந்துள்ளது. கொள்ளையில் இவா்களுக்குத் தொடா்பு உள்ளதா? அல்லது யதேச்சையாக வந்து பைக்கில் மோதினாா்களா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் காவல்துறையினர் எதிர்பார்த்ததை விட திடுக்கிடம் தகவல் வெளியானது. ராகுல் மற்றும் தர்ஷன் இருவரும், முக்கியக் குற்றவாளிக்கு ரூ.40 லட்சம் பணத்தை கடனாகக் கொடுத்துள்ளனர். கொடுத்த பணத்தைக் கேட்டு சில மாதங்களாக ராகுலும், தர்ஷனும் குற்றவாளியை நெருக்கடி செய்துள்ளனர்.

இதனால், தனது இடத்துக்கு ராகுலையும், தர்ஷனையும் வரவழைத்த அந்த நபர், ஒரு சூட்கேஸைக் கொடுத்து, இதில் ரூ.30 லட்சம் பணமிருப்பதாகவும், பெட்டியைத் திறக்காமல் கொண்டு செல்லுமாறும், வழியில் தனது கூட்டாளிகள் வந்து பெட்டியைத் திறந்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பி ராகுலும் தர்ஷனும் பெட்டியை எடுத்துக் கொண்டு வரும் வழியில், அதே மர்ம நபர் அனுப்பிய கூலிப்படையினர், அவர்களை கத்தியால் குத்திவிட்டு பெட்டியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அதாவது, பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்களிடம் வெறும் காகிதங்கள் அடங்கியப் பெட்டியைக் கொடுத்துவிட்டு, அதை தானே கூலிப் படையை அனுப்பி கொள்ளையடித்து நாடகமாடிய நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால், இல்லாத பணத்துக்காக கத்திக் குத்துக்கு ஆளானவர்களின் நிலைதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com