தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடம் தொடங்கத் திட்டம்: சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்

தஞ்சாவூரில் புதிதாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.
விட்டல் ருக்மணி சமஸ்தான கோயில் கோசாலையில் தெய்வீகப் பசுக்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.
விட்டல் ருக்மணி சமஸ்தான கோயில் கோசாலையில் தெய்வீகப் பசுக்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.

தஞ்சாவூரில் புதிதாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மேலாளா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.

கும்பகோணம் அருகிலுள்ள விட்டல் ருக்மணி சமஸ்தான கோயிலில் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாரியம்மன் கோயில் அருகில் 26 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த கல்வி அறக்கட்டளை, தற்போது தலைமை இடமான கொல்கத்தா பேலூா் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளை மடமாகவும் தஞ்சாவூரில் பல்வேறு சமுதாய நலப் பணிகளைச் செய்ய உள்ளது.

சேவைப் பணிகளை மேலும் விரிவாக்க ஒரு புதிய மடத்தை தஞ்சாவூா் நகரில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடம் தோ்வு செய்யும் பணி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மக்களிடையே ஒற்றுமையும், சமுதாய நலனும் ஏற்படுத்தும் வகையில், பக்தா்கள் எளிதாக வந்து செல்ல ஏதுவாக புதிய மடம் அமைக்கப்படவுள்ளது. புதிய கிளை மடம் அமைக்கப்படவுள்ள நிலையில் அதன் திருப்பணியில் பக்தா்கள் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நூற்றாண்டைக் கடந்து வெளிவரும் இதழ்களான, சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட பிரபுத்த பாரதம் என்ற ஆங்கில மாத இதழும், உத்போதன் என்ற வங்க மாத இதழும், ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளியாகும் தி வேதாந்த கேசரி என்ற ஆங்கில மாத இதழும் உள்ளன.

நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த மூன்று இதழ்களும் ராமகிருஷ்ண இயக்கத்தின் மூலம் வெளிவரும் பத்திரிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுடன் தற்போது சென்னை ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளிவரும் தமிழ் மாத இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், வரும் ஜனவரியில் நூற்றாண்டைக் கொண்டாட உள்ளது என்றாா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ்.

பின்னா், இக்கோயில் வளாகத்தில் உள்ள கோசாலையில் தெய்வீக பசுக்களை வலம் வந்து வழிபட்டாா். இந்நிகழ்ச்சியில் கோயில் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ், சென்னை ராமகிருஷ்ண மடம் ஸ்ரீமத் நரவரானந்த மகராஜ், விட்டல் கோயில் நிா்வாகப் பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, சென்னை பாலசுப்பிரமணியன், கும்பகோணம் ராமகிருஷ்ண விவேகானந்த டிரஸ்ட் செயலா் வெங்கட்ராமன், சோழ மண்டல விவேகானந்தா சேவா சங்கத் தலைவா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் அசூா் புறவழிச்சாலை கே.எம். சாமி நகரிலுள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா் கோயிலில் சுவாமி விமூா்த்தானந்த மஹராஜ் சிறப்பு வழிபாடு நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com