மாறி வரும் வாழ்க்கை முறையால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையினால், குற்றங்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மாறி வரும் வாழ்க்கை முறையால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


தமிழகத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையினால், குற்றங்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தேசிய அளவில் அதிக குற்றம் நடைபெறும் மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன. அதேவேளையில் தமிழகத்திலும் குற்றங்கள் ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் சராசரியாக 2 சதவீதம் வரை குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக  பல்வேறு குற்றங்கள் தொடர்பாக சுமார் 22 ஆயிரம் வழக்குகள் பதியப்படுகின்றன. இதில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றை விட சிறப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக உள்ளது.
அதிகரிக்கும் குற்றங்கள்: தமிழகத்தில் கடந்த ஆண்டு முக்கியமாக 1,488 கொலைகள், 2,571 கொலை முயற்சி சம்பவங்கள், 17,570 திருட்டுகள், 4,516 கன்னக்களவுகள், 2,295 வழிப்பறிகள், 81 ஆதாயக் கொலைகள்,100 கொள்ளைகள், 338 பாலியல் பலாத்காரம், 55 வரதட்சிணை மரணங்கள்,14 பாலியல் வன்கொடுமை, 2,045 குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
 ஒரு நாளைக்கு 4 கொலைகள் நடைபெற்றுள்ளன. இதேபோல ஒரு நாளைக்கு சராசரியாக 7 கொலை முயற்சி சம்பவங்கள், 49 திருட்டுகள், 12 கன்னக்களவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மேலும்,  கடந்த 2017-ஆண்டு நடைபெற்ற குற்றச்சம்பவங்களுடன் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற குற்றச் சம்பவங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் திருட்டு 13.93 சதவீதமும், வழிப்பறி 24.05 சதவீதமும், கொலை 1.5 சதவீதமும், கொலை முயற்சி 4.5 சதவீதமும், பாலியல் பலாத்காரம் 15.75 சதவீதமும் அதிகரித்துள்ளன. வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் இளம் சிறாரும், இளைஞர்களும் ஈடுபடுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
முதியவர்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடங்களுக்குள்ளே நீடிக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது தமிழகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இத்தகைய குற்றங்களைக் காவல் துறை தடுக்க முடியாது என்பதுடன், இவை சமூகத்தில் பேரழிவு ஏற்படுத்தும் நோய் என்பதால் குற்றங்களை முற்றிலும் தடுப்பதற்குரிய வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேவேளையில் திருட்டு, வழிப்பறி, கன்னக்களவு, கொலை, கொள்ளை போன்ற தடுக்கக் கூடிய குற்றங்களும் அதிகரித்து வருவது காவல்துறையினரிடமும், பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு, வழிப்பறி, ஆதாயக் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு காவல்துறை மட்டும் காரணமாகிவிட முடியாது. மாறி வரும் கலாசாரம், மக்களிடையே அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, நுகர்வு கலாசாரம் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்.
அனைத்து புகார்களுக்கும் வழக்கு: இது தொடர்பாக தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறியது:  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்டுபிடிக்கக் கூடிய குற்றச் சம்பவங்கள் மட்டும் காவல் துறையினரால் வழக்குப் பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. ஆனால் இப்போது பொதுமக்கள் அளிக்கும் அனைத்துப் புகார்களுக்கும் சமரசமின்றி வழக்குப் பதியப்படுகின்றன. இதனாலேயே வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்போல புள்ளி விவரங்கள் காட்டும்.
முன்பு சிறு குற்றங்கள், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் புகார் அளிப்பதில்லை. ஆனால் இப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
 இதனால் அவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்துக்கு நீதி தேடி காவல் நிலையங்களுக்கு வருகின்றனர். முன்பு பாலியல் ரீதியான குற்றங்கள் வெளியே தெரிந்தால் அசிங்கம், மரியாதை குறைவு என பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் இப்போது சூழல் மாறியுள்ளதால், இந்த வகை குற்றம் தொடர்பாக வழக்குகள் அதிகமாகப் பதியப்படுகின்றன.
வளரும் சமூகத்தில் குற்றம் அதிகரிக்கும்: வளரும் ஒரு சமூகத்தில் குற்றம் அதிகரிக்கவே செய்யும் என குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
மூன்றாவது பொருளாதார ஏற்றத்தாழ்வு, இளைய தலைமுறையிடம் குறையும் சமூகப் பொறுப்பின்மை, மாறும் வாழ்க்கை முறை ஆகியவை முக்கியக் காரணங்களாகும். இதில்,  ஒரு சில சம்பவங்கள் தவிர்த்து பெரும்பாலான சம்பவங்கள் காவல் துறையினரால் தடுக்க முடியாத சம்பவங்களே ஆகும்.
அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை: இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பின் நிர்வாகி கோ.சுகுமாரன் கூறியது: அதிகரிக்கும் வேலைவாய்ப்புயின்மை,பொருளாதார ஏற்றத்தாழ்வு, குறையும் பணப்புழக்கம் ஆகியவற்றினால்  அண்மைக்காலமாக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பட்டப்படிப்புக்கு மதிப்பு இல்லாமல் சென்று விட்டதால், கல்லூரி முடித்து வரும் இளைஞர்கள், வேலை கிடைக்காமல் தடுமாறுகிறார்கள்.  இதனால் அவர்கள், தவறான வழிக்குச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதன் விளைவாக அண்மைக்காலமாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்களில் 18 வயதுக்குட்பட்ட இளம்வயதினர் ஈடுபடுவது அதிகரிக்கிறது.
வலுவான நெட்வொர்க்: மேலும்,  முன்பைக் காட்டிலும் குற்றவாளிகளுக்கு இடையே உள்ள நெட்வொர்க் வலுவாக உள்ளது. இதனால்,  அவர்கள் குற்றங்களைத் தொடர்ந்து செய்கின்றனர். தங்களது நெட்வொர்க் மூலம் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கின்றனர். 
இளம் வயதினர், தங்களது சமூக ஈடுபாட்டையும், கடமையையும், சமூக ஊடகங்களில் எழுதுவதுடன் நிறுத்திவிடுகின்றனர். செயல்பாட்டுக்கு வருதில்லை.  சமூக ஈடுபாடு, கடமை குறித்து விழிப்புணர்வையும், ஊகத்தையும் போதிக்க வேண்டிய பள்ளி, கல்லூரிகள் வணிகமயமான கல்வியை போதிக்கின்றன.
சட்டங்களினால் மட்டும் தடுக்க முடியாது:  இதனால்,  இளம்வயதினர் சமூகத்தில் தங்களது பொறுப்பை மறந்து செயல்படுகின்றனர். ஒட்டுமொத்த சமூகமும் தனிமனித சுகத்தை தேடி பயணிக்கிறது. இக்காரணங்களால் இளம் வயதினர், தவறான வழிக்குச் செல்வதும், குற்றங்களில் ஈடுபடுவதும் அதிகரிக்கிறது.
சட்டங்களினால் மட்டும் தவறான வழியில் செல்லும் இளம் வயதினரை மீட்டெடுத்து கொண்டு வந்துவிட முடியாது. இத்தகைய சூழ்நிலையை மாற்றுவதற்கு அரசு கொள்கை ரீதியிலான சில முடிவுகளை எடுக்க வேண்டும்.  முக்கியமாக, வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க வேண்டும், சமூகப் பொறுப்பை இளம் வயதினரிடம் ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். 
அப்போதுதான் குற்றங்களை மட்டுமன்றி, இளைஞர்களையும் தவறான திசையில் செல்வதை தடுக்க முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com