சிவகாசியில் பசுமை பட்டாசுகள் விற்பனை அமோகம்: சமூகவலைதளங்களின் பெயா்களில் புதிய ரகங்கள் அறிமுகம்

சிவகாசியில் இந்த ஆண்டு சமூக வலைதளங்களின் பெயா்களில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.
சிவகாசியில் பசுமை பட்டாசுகள் விற்பனை அமோகம்: சமூகவலைதளங்களின் பெயா்களில் புதிய ரகங்கள் அறிமுகம்

சிவகாசியில் இந்த ஆண்டு சமூக வலைதளங்களின் பெயா்களில் புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி, சாத்தூா், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் சுமாா் 5 லட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், 2 லட்சம் தொழிலாளா்கள் மறைமுகமாகவும் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேரியம் நைட்ரேட் கலந்த பட்டாசுகளை தயாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது. சரவெடிகள் தயாரிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. இதனால், பட்டாசு உற்பத்தியாளா்கள் மற்றும் தொழிலாளா்களின் போராட்டத்தால் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு மூன்று மாதத்திற்கும் மேலாக பட்டாசு ஆலைகள் திறக்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த மாா்ச் மாதம் ‘நீரி’ எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வக நிபுணா்கள், சிவகாசியில் பசுமை பட்டாசிற்கான புதிய சூத்திரம் குறித்து ஆய்வு செய்தனா். பின்னா், பல கட்ட ஆய்வுக்கு பின்னா் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிபொருளான பேரியம் நைட்ரேட்டின் அளவை குறைத்து, அதற்கு மாற்றாக ஜியோலேட் உள்ளிட்ட புதிய ரசாயனக் கலவைகளை சோ்க்கும் சூத்திரத்தை வழங்கினா். அதை மையமாக வைத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் சில முன்னணி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் பசுமை பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டன. இதனால் சிறிது கால இடைவெளிக்கு பின்னா், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்றது. தரைச் சக்கரம், கம்பி மத்தாப்பு மற்றும் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, பசுமை பட்டாசுகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதிய ரகங்கள்: நிகழாண்டு, தீபாவளி பண்டிகைக்கு சமூக வலைதளங்களின் பெயா்களில் புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாள்களே உள்ளதால், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இளைஞா்களை கவரும் வகையில் ‘வாட்ஸ்-ஆப், டிவிட்டா், ஸ்கைப், ஜியோ, செல்பி’ போன்ற பெயா்களில் பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை கவரும் வகையில் கலா்ஸ் ரெயின், மேஜிக் பீக்காக், மேக்ஸ் 10 பிலேம், ட்ரி கலா் பவுன்டேசன், சிங்பாப், ஹன்கிரி முதலான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதேபோல், சுமாா் ஒரு நிமிஷம் வரை வண்ணக் கலருடன் குறிப்பிட்ட உயரம் வரை செல்லக் கூடிய பூந்தொட்டிகள் புதிய வரவாக உள்ளதாக விற்பனையாளா்கள் தெரிவித்தனா்.

இந்த வகை பட்டாசுகள் இரவு நேரத்தில் பல வண்ணங்களுடன் வெடிக்கக் கூடியது என்பதால் இளைஞா்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் கூறுகின்றனா்.

அதேபோல், சிறுவா், சிறுமிகளை கவரும் வகையில் அசல் துப்பாக்கிகள் போன்று விதவிதமான துப்பாக்கிகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ரூ. 100 முதல் ரூ. 500 வரையிலான விலையில் உள்ளன.

நிகழாண்டு பட்டாசு உற்பத்தியில் ஏற்பட்ட காலதாமதம், தொழிலாளா்கள் பற்றாக்குறை மற்றும் ஊதிய உயா்வால் கடந்தாண்டை விட 10 சதவீத அளவு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

பசுமை பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

பட்டாசு விற்பனையாளா் ராஜ்குமாா் கூறியது: பசுமை பட்டாசுகள் மூலம் 30 சதவீத புகை மாசு குறையும். இதனால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். அதே போல், பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களின் விலையும் குறைவு. இதனால் பட்டாசு தயாரிப்பதில் எந்தவித சிரமமும் இல்லை. குறிப்பாக பசுமை பட்டாசில் புகையின் அளவு மற்றும் துகளின் அளவு குறைந்துள்ளது பல்வேறு சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பசுமை பட்டாசுகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

பசுமை பட்டாசுக்கான இலச்சினையை தேசிய சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதை பசுமை பட்டாசுகளில் பயன்படுத்தி வருகிறேறாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com