சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ஏ.பி. சாஹி: யார் இவர்?

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி. ஷாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ஏ.பி. சாஹி: யார் இவர்?


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் ஷாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏ.பி. ஷாஹி பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் நிலையில் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1959-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிறந்த அம்ரேஷ்வர் பிரதாப் ஷாஹி, 1985-இல் சட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ஏ.பி. ஷாஹி, அங்கு சிவில் மற்றும் அரசியலமைப்பு வழக்குகளை நடத்தி வந்தார். அதேசமயம், பல்வேறு கல்வி நிறுவனங்களுக்காகவும் அவர் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார்.

இதையடுத்து, 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் அதே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார்.

இதன்பிறகு, கடந்தாண்டு நவம்பர் 10-ஆம் தேதி ஏ.பி. ஷாஹி பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பர் 17-இல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இவர் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இவர் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகி இருந்தபோது, சில முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

பிகார் அரசின் விதியை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி ஏ.பி. ஷாஹி அமர்வு:

பிகாரில், அம்மாநில முன்னாள் முதல்வர்களுக்கு அரசு இல்லங்களை அவர்களது ஆயுள்காலத்துக்கும் ஒதுக்க பிகார் சிறப்பு பாதுகாப்புக் குழு (திருத்தம்) சட்டம்-2010 வழிவகுக்கிறது.    

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது, துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாவுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இதனிடையே, அந்த இரண்டு கட்சிகளுக்கிடையிலான கூட்டணி முறிந்ததையடுத்து, ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல்வரானார்.

இதனால், தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் என்ற அந்தஸ்தில் வழங்கப்பட்டு வந்த அரசு இல்லத்தை காலி செய்யுமாறு அவருக்கு பிகார் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் அதை எதிர்த்து பிகார் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இதை விசாரித்த ஒரு நீதிபதி கொண்ட அமர்வு, பிகார் அரசின் உத்தரவை உறுதி செய்து அவரது மனுவைத் தள்ளுபடி செய்தது. 

இதை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷாஹி, நீதிபதி அஞ்சனா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு, முன்னாள் முதல்வர்களுக்கு ஆயுள்காலத்துக்கும் அரசு இல்லங்களை ஒதுக்குவது தொடர்பான பிகார் அரசின் விதியை தாமாக எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி ஏ.பி. ஷாஹி அமர்வு, "முதல்வர் பதவியிலிருந்து சென்றவர்களுக்கு அரசு இல்லங்களை அவர்களது ஆயுள்காலத்துக்கும் ஒதுக்குவது போன்ற வசதிகளை அளிப்பது தவறான நடவடிக்கையாகும். இது அரசியலமைப்பு விரோத நடவடிக்கையாகும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். இந்த விதிகள் ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்தது.

இந்த உத்தரவு, முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, ஜெகந்நாத் மிஸ்ரா, சதீஷ் பிரசாத் சிங், ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோரை பாதிப்புக்குள்ளாக்கியது. அதேசமயம், 2005-ஆம் ஆண்டு முதல் முதல்வருக்கான அரசு இல்லம் தவிர்த்து பாட்னாவிலும் அவருக்கு கூடுதல் அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. இதனால், இந்த உத்தரவு நிதிஷ் குமாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஊழல் புகார்:

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பி. ராமையா ஜாமீன் மனுவை விசாரித்த பிகார் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ராகேஷ் குமார், பிகார் மாநில நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் ஊழல் புரையோடு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற கொலீஜியம் ஆகியவை தலையிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷாஹி தலைமையிலான 11 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, நீதிபதி ராகேஷ் குமார் தீர்ப்புக்கு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்து, அவரை அனைத்து பணிகளில் இருந்தும் விடுவித்தது.

இதன்பிறகு, அடுத்த 3 நாட்களில் நீதிபதி ராகேஷ் குமாருக்கு மீண்டும் நீதித்துறை பணிகளை ஒதுக்கி தலைமை நீதிபதி ஏ.பி. ஷாஹி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் டிசம்பர் 31, 2020-இல் ஓய்வு பெறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com